உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் பல ஆய்வுகளை செய்து வரும் நிலையில், அவற்றில் ஒன்றாக பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கும் ந்யூரா லிங்க் (Neuralink) செயற்கை பார்வை அளிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. Blindsight என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் மனிதனுக்கு பொருத்தப்பட இருப்பதாகவும், இதன் மூலம் இனிமேல் உலகில் யாரும் பார்வையற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை என்றும் அவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு முழுமையாக கண்பார்வை காணும் வகையில் இந்த சாதனம் பொருத்தப்படும் என்றும், இதன் செயல்பாடு பற்றிய எதிர்பார்ப்புகளை கவனமாக நிர்ணயிக்க வேண்டியது உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Blindsight என்பது ஆரம்பத்தில் குறைந்த தீர்மானத்திலான (low-resolution) பார்வையை மட்டுமே வழங்கும், ஆனால் காலப்போக்கில், இது சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பார்வையை வழங்கும் அளவிற்கு மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, இந்த சாதனம் குரங்குகளுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் மனிதர்களிலும் சோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Blindsight என்பது முழுமையாக பார்வை இழந்தவர்களுக்கும், இரண்டு கண்களும் பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பார்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிறந்தது முதல் பார்வை இழந்தவர்களுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“குருடர்களுக்கு பார்வை தருவோம், செவிடர்களுக்கு ஒலி தருவோம்” என்று சிலர் மதத்தின் பெயரில் தவறான வாக்குறுதிகள் வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மஸ்க் உண்மையில் அதை அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதால், அவர் தான் உண்மையான கடவுள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Blindsight என்பது கண்பார்வை தரவுகளை செயலாக்கும் மூளையின் பகுதியாகிய Visual Cortex-இல் பொருத்தப்படும் ஒரு மைக்ரோஎலக்ட்ரோட் அணிவகுப்பு (microelectrode array) ஆகும். இது, ஒரு கேமரா வழங்கும் பார்வை தரவுகளை அடிப்படையாக கொண்டு மூளையில் உள்ள நரம்பணுக்களை (neurons) தூண்டி பார்வையை உருவாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.