இன்று இணையம் தான் முக்கிய ஊடகமாக இருக்கும் நிலையில், எந்த ஊடகமும் இணையத்தின் உதவி இல்லாமல் செயல்பட முடியாது. இதை 26 வருடங்களுக்கு முன்பே பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கணித்துள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு அவர் அளித்த ஒரு பேட்டியில், “இணையம் என்பது எதிர்காலத்தில் ஊடகத்துறையில் மிகப்பெரிய அளவில் விளங்கும், மேலும் ஊடகங்களுக்குமான சிறப்பு தொகுப்பாக இருக்கும்” என்று கூறியிருந்தார். செய்தித்தாள்கள், இதழ்கள், தொலைக்காட்சிகளில் மட்டுமே செய்திகளை பார்த்து வந்த பொதுமக்கள், அவர் சொன்னதை அன்று நம்பவில்லை. அது மட்டும் இல்லாமல், அவரை பைத்தியக்காரன் என்று கூட நினைத்தார்கள்.
ஆனால் 26 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கூறியது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இன்று எந்த ஒரு ஊடகமும் இணையத்தின் உதவியில்லாமல் செயல்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 26 ஆண்டுகளுக்கு முன்பே எலான் மஸ்க் கணித்தது நமக்குப் புரிகிறது. செய்தியாக இருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும், எதை வேண்டுமானாலும் நாம் எப்போது விருப்பமோ அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது இன்று நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல், இப்போது அவர் ஏ.ஐ. துணையுடன் உருவாக்கும் வருங்காலத்தை பற்றியும் கணித்துள்ளார். பாரம்பரிய வேலைகள் அனைத்தையும் ஏஐ மாற்றிவிடும் என்றும், நமக்கு எந்த வேலையும் இருக்காது என்றும், வேலை என்பது கட்டாயம் என்ற நிலை மாறி வேலை என்பது விருப்பமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
நமது அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் பார்த்துக் கொள்ளும் என்றும், மக்களுக்கு அரசாங்கமே நிலையான வருமானத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 26 ஆண்டுகளுக்கு முன் அவர் கணித்தது எப்படி நடந்ததோ, அதேபோல அவர் இப்போது கூறியதும் இன்னும் சில ஆண்டுகளில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.