அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, பாமக, தேமுதிக, மதிமுக.. 8 கட்சிகளில் ஓரங்கட்டப்பவர்கள் விஜய்யின் கட்சியில் சேர துடிக்கிறார்கள்.. பனையூர் கதவுகள் திறக்கப்படவில்லை.. ஆரம்பத்தில் இருந்து என்னுடன் இருப்பவர்கள் போதும்.. பதவியை எதிர்நோக்கி வரும் சுயநலவாதிகள் தேவையில்லை.. கறாராக இருக்கின்றாரா விஜய்?

திரைத் துறையில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். விஜய்யின் அரசியல்…

vijay speech

திரைத் துறையில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், வி.சி.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட எட்டு கட்சிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அல்லது அதிருப்தியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், விஜய்யின் கட்சியில் தஞ்சம் புகுவதற்கு ஆர்வத்துடன் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் இருந்தே நடிகர் விஜய், தனது அரசியல் அணுகுமுறையில் ஒரு ‘கறார்’ தன்மையை கடைப்பிடித்து வருவதாக தெரிகிறது. அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் தமது கட்சியில் இணைவது குறித்த அவரது அணுகுமுறை மிகவும் நிதானமானதாக இருக்கிறது.

மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களை விஜய் உடனடியாக அனுமதிப்பதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், பிற கட்சிகளில் பதவியோ அல்லது செல்வாக்கோ கிடைக்காததால், அத்தகைய கட்சியில் இருந்து தனது கட்சிக்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருப்பதுதான்.

ஆரம்பத்தில் இருந்து என்னுடன் இருப்பவர்கள் போதும்” என்ற நிலைப்பாட்டை விஜய் உறுதியாக எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ரசிகர் மன்றத்தின் மூலம் பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அடிமட்ட ஆதரவாளர்களின் விசுவாசத்தையே அவர் தனது அரசியல் பலமாக கருதுகிறார். வெளியாட்களை உடனடியாக சேர்ப்பது, இந்த உண்மையான விசுவாசிகளை ஓரங்கட்டிவிடும் என்று அவர் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

பழைய அரசியல்வாதிகளின் ‘கலாச்சாரம்’ மற்றும் ஊழல் கறை படியாத ஒரு தூய்மையான அரசியல் பயணத்தை முன்னெடுப்பதே விஜய்யின் நோக்கம். எனவே, ஏற்கனவே அரசியல் ரீதியாக பெயர் பெற்றவர்களை கூண்டோடு சேர்த்தால், அது கட்சியின் பிம்பத்தை பாதிக்கலாம் என்று அவர் கருதுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளில், நீண்ட நாட்களாக செயல்பட்டும் அங்கீகாரம் கிடைக்காத நிர்வாகிகள், பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த அதிருப்தியாளர்கள், மற்றும் பா.ஜ.க.வில் தலைமையால் ஒதுக்கப்படுவதாக உணரும் நபர்கள் என பல தரப்பினரும் விஜய்யின் கட்சியை ஒரு மாற்றுப் பாதையாக பார்க்கின்றனர்.

மற்ற கட்சிகளில் ஏற்கனவே இருக்கும் தலைமையின் நிழலில் செயல்படுவதைவிட, புதிதாக தொடங்கப்படும் த.வெ.க-வில் இணைந்தால், தாங்கள் முதன்மை கட்டத்தில் இடம்பிடித்துப் பதவி பெற முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். தமது சொந்த மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு கொண்ட சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விஜய்க்கு பின்னாலுள்ள இளைஞர் சக்தி மற்றும் ரசிகர் பலத்தை மூலதனமாக கொண்டு மீண்டும் அரசியலில் செல்வாக்கு பெறலாம் என்று எண்ணுகின்றனர்.

ஆனால் பழைய அரசியல்வாதிகளின் குப்பை தொட்டி அல்ல தவெக என்ற பிம்பத்தை அவரது கட்சிக்கு உருவாக்குகிறது. இது கட்சி தலைமை மற்றும் கொள்கைகள் மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். அவசரத்தில் சுயநலத்துடன் வரும் நபர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் கட்சிக்குள் எழும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் புகார்களை அவர் முன்கூட்டியே கட்டுப்படுத்த முடியும்.

விஜயின் ‘த.வெ.க.’ தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதில் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது. ஆரம்பத்தில் அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், தேர்தல் நெருங்கும்போது தனது கறாரான நிலைப்பாட்டை சற்றே தளர்த்துவாரா அல்லது கடைசிவரை தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.