அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்ட நிலையில், அவர் திமுகவுக்கு எதிராக பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கும் நிலையில், அறநிலையத்துறை விஷயத்தை பேசி இருப்பது தேவையில்லாதது என்றும், அது திமுகவுக்கு எதிரான வாக்குகளை அவர் இழக்க வழிவகுக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“அரசிடமிருந்து இந்து கோவில்களை மீட்போம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறுவதும், “கோவில் காசிலிருந்து கல்லூரிகள் கட்டுவது தவறானது” என்று பேசுவதும் மிகப்பெரிய தவறு என்றும் கூறப்படுகிறது. அதிமுக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே கோவில் காசிலிருந்து கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகின்றன. அவ்வாறு இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் குரலாக இருக்கிறது என்றும், இது திமுக எதிர்ப்பு வாக்குகளை அவருக்கு வராமல் செய்யும் வேலை என்றும் கூறி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட ஆரம்பத்தில் இந்து சமய அறநிலையத்துறை இடம் இருந்து கோவில்களை மீட்போம் என்று சொன்னவர்தான். ஆனால், அதன் பிறகு அவர் தமிழகத்தில் உள்ள மக்கள் மனநிலையை புரிந்துகொண்டு அதை பற்றி அவர் தொடவில்லை. தமிழ்நாட்டில் மத அரசியல் எடுபடாது என்று ஜெயலலிதா புரிந்துகொண்டதால், மதமாற்ற தடைச் சட்டம் மற்றும் ஆடு மாடு பலி கொடுக்கக்கூடாது ஆகிய சட்டங்களை வாபஸ் பெற்றார். அவருடைய அமைச்சரவையில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
“திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, லஞ்ச லாவண்யம், ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது, வாரிசு அரசியல் தலைதூக்குகிறது” போன்ற பிரச்சனைகளை பற்றி எடப்பாடி பேசாமல், “இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து கோவில்களை மீட்போம்” என பாஜகவின் குரலாக பேசுவதைப் பார்க்கும்போது, திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சுத்தமாக அதிமுகவுக்கு வராது என்றுதான் தோன்றுகிறது என்றும் கூறி வருகின்றனர்.
எனவே, இனிமேலாவது எடப்பாடி பழனிசாமி எதார்த்தத்தை புரிந்துகொண்டு அவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். தொடர்ந்து இதேபோல் எடப்பாடி பழனிசாமி பேசினால், திமுகவின் எதிர்ப்பு வாக்கு மொத்தமாக விஜய்க்கு செல்லும் ஜாக்பாட் கூட கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
