பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு வராது என்று முடிவு செய்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, வேறு வழியின்றி இந்துத்துவாவை கையில் எடுத்திருக்கிறார் என்றும், ஆனால் அது ஒரு “விஷப்பரீட்சை” என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பகாலத்தில் இருந்தே அதிமுக இந்துக்களுக்கு ஆதரவான கட்சியாக இருந்தாலும், தீவிரமான இந்துத்துவத்தை கடைபிடிக்காது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட மதமாற்ற தடை சட்டம் மற்றும் ஆடு கோழி வெட்டத்தடை என்ற சட்டத்தை போட்டாலும், அதன் பின் தேர்தலில் தோல்வியடைந்தபின் சட்டத்தை அவர் வாபஸ் பெற்றுவிட்டார். எனவே, தீவிரமான இந்துத்துவாவை அவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்துத்துவா என்ற கொள்கையின் அடிப்படையிலேயே கட்சியை நடத்தி வரும் பாஜகவின் குரலாக தற்போது எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்றும், அதனால்தான் தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று பேசியிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு என்பது ராஜதந்திரமானது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில், திமுக மீது இந்துக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதும், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இந்து பண்டிகைக்கு வாழ்ட்த்து சொல்லவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் நிலையில், சரியாக இந்துத்துவாவை நாம் கையில் எடுத்தால் நமக்கு இந்துக்கள் ஓட்டு மொத்தமாக விழும் என்ற நம்பிக்கைதான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு உள்ள அர்த்தமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து அறநிலையத்துறையை விடுவிக்க வேண்டும் என்பது கடந்த பல ஆண்டுகளாக பாஜகவின் குரலாக இருந்து வரும் நிலையில், அந்தக் குரலை அதிமுகவும் தற்போது கூறி வருவது அதிமுகவின் முன்னணி தலைவர்களுக்கே விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், வேறு வழி இல்லை. சிறுபான்மையினர் ஓட்டுகள் திமுகவுக்கும், விஜய்க்கும் செல்லும் நிலையில், அதில் ஒரு சதவீதம் கூட அதிமுகவுக்கு கிடைக்காது என்பதால் இந்துத்துவாவை தான் கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும், தேர்தலுக்கு பின்னர் இந்துத்துவாவை கைவிட்டு விடலாம் என்று கூட நினைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு எந்த அளவுக்கு தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை என்றாலும், இந்துக்களின் ஓட்டு படிப்படியாக அதிமுகவுக்கு மாற வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆக மொத்தம், அரசியல்வாதிகள் ஜாதி அரசியலை மட்டுமின்றி மத அரசியலையும் கலந்துதான் செய்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. மக்கள் மட்டுமே சுதாரிப்பாக இருந்து, ஜாதி, மத அரசியல் இல்லாமல் இருக்கும் தலைவர் யார் என்பதை தேர்வு செய்து அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நடுநிலை வாக்காளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
