அதிமுக-பாஜக கூட்டணிக்கு இதுவரை எந்தக் கட்சியும் வருவதாக அறிவிக்காததும், அப்படியே வருவதாக இருந்தாலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என நிபந்தனை விதிப்பதும் எடப்பாடி பழனிசாமியை விரக்திக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருக்கும் ஒரே கட்சியான பாஜக, ஆட்சியில் பங்கு வேண்டும், முதலமைச்சர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மறைமுகமாக ஆளுமை செலுத்தி வருகிறது.
முதலமைச்சர் பதவிக்காகவும், கட்சித் தலைவர் பதவிக்காகவும் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு பின்னால் ஒரு பெரிய வாக்கு சதவீதம் இருக்கிறது என்று தெரிந்தும், மூவரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார். கட்சி தலைமையை பிடிக்க முடிந்த இந்த நிலைமையில், உட்கட்சியில் இருந்து எந்த விதமான பிரச்சினையும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்றாலும், தற்போது மற்ற கட்சிகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அவரால் சமாளிக்க முடியவில்லை.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு முன்வைக்கப்படும் நிபந்தனைகள்:
அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என அன்புமணி நிபந்தனை போடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட சின்ன சின்ன கட்சி தலைவர்கள் கூட ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கிவிட்டன. எனவே, எடப்பாடி பழனிசாமி விரக்தியில் இருப்பதாகவும், “கஷ்டப்பட்டு கட்சியை காப்பாற்றிய நிலையில், மற்ற கட்சிக்காரர்களை அமைச்சராக்குவதற்கா நான் அரசியலுக்கு வந்தேன்? என்று தன்னுடைய வட்டாரங்களில் கூறி இருப்பதாகவும் தெரிகிறது.
திமுக கூட்டணியின் நிலை:
திமுக கூட்டணியிலும் “ஆட்சியில் பங்கு வேண்டும்” என்ற குரல் இன்னும் அதிகமாக ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி செய்த திமுக, கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை தரவில்லை. ஆனால், இனிமேல் அவ்வாறு ஏமாற்ற முடியாது என்றும், மெஜாரிட்டிக்கு தேவையான மேஜிக் நம்பரான 118 தொகுதிகளில் திமுக வென்றுவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், அதற்கு குறைவாக வெற்றி பெற்றால் கண்டிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்யின் நிலைப்பாடு:
விஜய் ஏற்கனவே தான் முழு மெஜாரிட்டி பெற்றாலும் கூட, தன்னுடைய கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அதிகாரம் கொடுப்பேன் என்று அறிவித்துவிட்டார்.
கூட்டணி ஆட்சி சாத்தியக்கூறுகள்:
எனவே 2026 தேர்தலை பொருத்தவரை, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி ஆட்சிதான் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வியூக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக அமையலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
