காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுகவால் ஜெயிக்க முடியாது என்றும், குறிப்பாக கூட்டணி இல்லாமல் திமுகவால் ஜெயிக்க முடியாது என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி பத்திரிகை ஒன்றில், திமுகவின் கூட்டணி கட்சிகள், ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்பதால், இந்த முறை துணிந்து தனித்து போட்டியிடலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த பத்திரிகையாளர் மணி, “காங்கிரஸ் கட்சி இல்லாமல் இதுவரை திமுக ஜெயித்ததில்லை என்றும், இனிமேலும் ஜெயிக்காது என்றும், கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஜெயித்ததாக வரலாறு இல்லை” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திமுகவுக்குக் கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதால் தான் கிடைக்கிறது என்றும், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காமல் இருந்தால் கண்டிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காது என்றும் மணி கூறினார். இதற்குரிய காரணமாக, “காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஒருவேளை திமுக ஜெயித்து ஆட்சியில் அமைந்துவிட்டால், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துவிடும் என்ற அச்சம் சிறுபான்மையினருக்கு இருக்கும்” என்றும், எனவேதான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே சிறுபான்மையினர் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுவரை திமுக தனது தேர்தல் வரலாற்றில் கூட்டணி இல்லாமல் ஜெயித்ததே இல்லை என்றும், இனிமேலும் ஜெயிக்க முடியாது என்றும், எனவே காங்கிரஸ் கட்சியை கூட்டணியை விட்டு விலக்காது என்றும், அதுவே விலகும் பட்சத்தில் திமுக பெரும் முயற்சி செய்து காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திருச்சி சிவா பேசியபோது கூட, தமிழக காங்கிரஸ் தலைவர்கள்தான் கண்டனம் தெரிவித்தார்கள் என்றும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், எனவே காங்கிரஸ் கட்சி திமுகவுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து வருகிறது என்றும் மணி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
மொத்தத்தில், விஜய் ஒரு பக்கம் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவராக இருக்கிறார் என்றால், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் நான்கு சதவீதம் வாக்குதான் என்றாலும், அந்த கட்சியும் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் ஒரு கட்சியாக இருக்கும் என்று கூறப்படுவது வித்தியாசமான களநிலையாக பார்க்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
