நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ அரசியல் களத்தில் கால் பதித்ததில் இருந்தே, திராவிட கட்சிகள் அவரை நேரடியான மற்றும் மறைமுகமான விமர்சனங்களால் சீண்டி வருகின்றன. “அட்டை தாஜ்மஹால்,” “வெறும் சினிமா கவர்ச்சி” போன்ற விமர்சனங்களுக்கு மத்தியில், த.வெ.க. மேலிடம் தனது எதிர்கால அரசியல் வியூகத்தை வகுத்து வருகிறது. அதன் முக்கிய அங்கம் 200 இளம் பேச்சாளர்களை கொண்ட பதிலடி அணி உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
எம்.ஜி.ஆர் அரசியல் பிரவேசம் செய்தபோது, தி.மு.க. செய்த அதே தவறை தற்போது திராவிட கட்சிகள் விஜய்யின் விஷயத்தில் செய்கின்றனவா? சமூக ஊடகங்கள் நிறைந்த இக்காலத்தில், இந்த அரசியல் மோதலின் போக்கு எப்படி இருக்கும்?
அரசியல் களத்தில் ஒரு தலைவர் ஆரம்பத்தில் எதிர்க்கப்படுவது இயல்பு. ஆனால், அந்த எதிர்ப்பும் விமர்சனமும் ஒரு தலைவரின் பிரபலம் அதிகரிக்கவே உதவுகின்றன என்ற உண்மை உண்டு. அண்ணாவுக்கு பிறகு தி.மு.க-வில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். அதிமுக என்ற தனிக் கட்சி ஆரம்பித்தபோது, தி.மு.க. தலைவர்கள் அவரை ஒரு ‘நடிகர்’ என்றும், மலையாளி என்றும் இழிவுபடுத்தினர். ஆனால், தி.மு.க. செய்த ஒவ்வொரு விமர்சனமும், எம்.ஜி.ஆரை மக்கள் மத்தியில் மேலும் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. “சினிமா கவர்ச்சியைத் தாண்டி மக்களுக்காக அவர் உழைக்கிறார்” என்ற பிம்பத்தை உருவாக்க அந்த விமர்சனங்களே மறைமுகமாக உதவின.
இன்று, த.வெ.க.வின் கட்சி பணிகள் மற்றும் கள செயல்பாடுகள் குறித்து பேசுவதைவிட, எதிர்த்தரப்பு தலைவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் சீண்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த தொடர் தாக்குதல்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில், “விஜய்யை ஏன் இவர்கள் இவ்வளவு பயப்படுகிறார்கள்?” என்ற கேள்வியை எழுப்பி, த.வெ.க-விற்கு ஆதரவு அலையை திருப்பச் செய்யும் என்று த.வெ.க. தலைமை நம்புகிறது.
விஜய்யின் தலைமையிலான த.வெ.க., இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல ஒரு புதிய உத்தியை கையாள்கிறது. பாரம்பரிய அரசியல் போல பதிலுக்கு பதில் சண்டையிடுவதை தவிர்த்து, தரமான வாதங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 200 இளம் மற்றும் துடிப்பான பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் வரலாறு, கட்சி சித்தாந்தம், த.வெ.க-வின் கொள்கைகள் மற்றும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகள் குறித்து தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இளம் பேச்சாளர்களுக்கு, “நாகரீகமான முறையில் பதிலடி கொடுங்கள்” என்று த.வெ.க. மேலிடம் தெளிவான அறிவுரை வழங்கியுள்ளது. தனிப்பட்ட தாக்குதல்கள், தரக்குறைவான விமர்சனங்கள் ஆகியவற்றை தவிர்த்து, ஆதாரங்களின் அடிப்படையில், அரசியல் தரவுகளை வைத்து பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
த.வெ.க-வின் நிர்வாக அமைப்பின் பலம், விஜய்யின் மக்கள் நலத் திட்டங்கள், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த த.வெ.க-வின் பார்வை ஆகியவற்றை பற்றி பேசுவதற்கு பதிலாக, திராவிட கட்சிகள் ஏன் விஜய்யின் சினிமா பிரபலம் பற்றி மட்டுமே பேசுகின்றன என்று கேள்விகள் எழுப்பி, எதிர் தரப்பினரை சிந்திக்க வைப்பதே இவர்களின் முக்கிய பணியாகும்.
எம்.ஜி.ஆர். காலத்தில் அரசியல் விமர்சனங்கள் செய்தித்தாள்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் மட்டுமே மக்களை சென்றடைந்தன. ஆனால், இன்றைய காலகட்டம் முழுவதும் சமூக ஊடகங்களால் நிறைந்திருக்கிறது. இது த.வெ.க-விற்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஒரு அரசியல் தலைவர் செய்யும் தவறான விமர்சனம் அல்லது சொல்லும் பொய் வாதம், அடுத்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தகவல் ஆர்வலர்களால் உண்மைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். எதையும் மறைக்கவோ, மக்களை ஏமாற்றவோ முடியாது.
திராவிட கட்சிகளின் மூத்த தலைவர்கள் பேசும் ஒவ்வொரு விமர்சனமும், சமூக ஊடகங்களில் ‘மீம்’களாகவும், ‘ரீல்ஸ்’களாகவும் மாறி, சில மணி நேரங்களிலேயே பட்டி தொட்டியெங்கும் சென்று சேருகின்றன. இது த.வெ.க-விற்கு இலவச விளம்பரமாக அமைகிறது.
த.வெ.க-வின் இளம் பேச்சாளர்கள், சமூக ஊடகங்களின் வேகத்தை புரிந்து, இளைய தலைமுறைக்கு உகந்த வடிவத்தில் அதாவது சமூக ஊடக இடுகைகள், விவாதங்கள், வீடியோக்கள் மூலம் தங்கள் பதிலடியை வழங்குவது, பாரம்பரிய கட்சிகளின் பதிலடியைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எனவே, எம்.ஜி.ஆர். காலத்தை போல, ஒரு நடிகரை விமர்சிப்பது அவருடைய புகழை குறைக்கும் என்று கருதுவது, இன்றைய சூழலில் காலம் கடந்து போன தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்யின் அரசியல் எழுச்சியை தடுக்க விரும்பினால், அவரை சீண்டுவதை நிறுத்திவிட்டு, தங்கள் ஆட்சி கால சாதனைகள் மற்றும் த.வெ.க-வைவிட சிறந்த மாற்றை எவ்வாறு வழங்க போகிறார்கள் என்று பேசுவதே திராவிட கட்சிகளுக்கு சரியான வியூகமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
