தி.மு.க. கூட்டணி சின்னாபின்னமாக உடைகிறது என்றும், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் வி.சி.க. விஜய்யின் கூட்டணிக்கு வந்துவிடும் என்றும், எனவே வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தவெகவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்றும் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய், அ.தி.மு.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ள நிலையில், அவர் ஒரு மெகா கூட்டணி அமைத்தால், அது கண்டிப்பாக தி.மு.க.வுக்கு தான் பாதகமாக இருக்கும். குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தி.மு.க. கூட்டணியின் பலமாக இருக்கும் நிலையில், அந்த இரண்டு கட்சிகளையும் தி.மு.க.வில் இருந்து தன் பக்கம் விஜய் இழுத்து விட்டால், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். அதுமட்டுமின்றி, தி.மு.க.வுக்கு சிறுபான்மையினரின் 12 சதவீத ஓட்டுகள் அப்படியே இதுவரை கிடைத்து வருகின்றன. ஆனால், இனிமேல் அந்த ஓட்டுகள் பாதி விஜய்க்கு சென்றுவிடும் என்று கோலாகல ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.
“வலுவான கூட்டணி, சிறுபான்மையினர் ஓட்டுகள், இளைய தலைமுறை ஓட்டுகள், இளைஞர்களின் ஓட்டுகள் ஆகியவற்றை விஜய் கவர்ந்து விட்டார் என்றால், போட்டி தவெகவுக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும்தான் இருக்குமே தவிர, தி.மு.க. போட்டியிலேயே இருக்காது” என்று அரசியல் விமர்சகர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு மகளிர் ஓட்டுகள், சிறுபான்மையினர் ஓட்டுகள், எஸ்.சி., எஸ்.டி. ஓட்டுகள், முதல் தலைமுறை ஓட்டுகள் மற்றும் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் ஓட்டுகள், தி.மு.க. அதிருப்தியாளர்கள் ஓட்டுகள், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாறி மாறி வாக்கு போட்டு வெறுப்பில் உள்ளவர்களின் ஓட்டுகள் எல்லாமே செல்லும் என்றும், எனவே விஜய்க்கு பல சாதகங்கள் இருப்பதாகவும் கோலாகல ஸ்ரீநிவாஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.பி. ஒருவர் ராகுல் காந்தியுடன் கூற இருப்பதாகவும், அதற்கான அப்பாயின்ட்மென்ட் கிடைத்து விட்டதாகவும் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகி விட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சென்றுவிடும் என்றும், இந்த மூன்று கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டாலே, தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
கோலாகல ஸ்ரீநிவாஸ் கூறுவதுபோல், தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறுமா? தி.மு.க. பலவீனமடையுமா? விஜய் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
