திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் நேற்று இரவு மின்கசிவு காரணமாகத் தீ விபத்த ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இம்மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வந்தனர். இம்மருத்துவமனையின் 1,2 மற்றும் 3-வது தளங்களில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் லிப்ஃட்டில் இருந்த 6 பேர் பலியாகினர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படவே சுமார் 28 பேர் அருகிலுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தினை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தீ விபத்திற்குக் காரணம் மின்கசிவு அல்ல என்பதை மின்வாரிய ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிவாரண தொகையை அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-12-2024) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த திரு.மணிமுருகன் (வயது 30) த/பெ.ஜெகநாதன், திருமதி. மாரியம்மாள் (வயது 50) க/பெ.ஜெகநாதன், தேனி மாவட்டம் சீலையம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த திரு. சுருளி (வயது 50) த/பெ. கந்தசாமி, திருமதி.சுப்புலட்சுமி (வயது 45) க/பெ.சுருளி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த திரு.ராஜசேகர் (வயது 36) த/பெ.ராஜேந்திரன், செல்வி.கோபிகா (வயது 6) த/பெ. ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை
மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.