இந்திய வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஏடிஎம் மையங்களை நிறுவியுள்ள நிலையில், தற்போது சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பதால் ரூபாயின் தேவை குறைந்துள்ளது என்றும், அதனால் ஏடிஎம்களில் அதிக அளவு பணம் எடுக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரு வங்கி ஒரு ஏடிஎம்-ஐ நிறுவி அதற்கு பராமரிக்க அதிக செலவாகிறது என்பதால், ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரம் ஏடிஎம் சென்டர் இருந்தன. இந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 லட்சத்திற்கும் 15 ஆயிரம் ஏடிஎம் சென்டர் மட்டுமே இருப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 4000 ஏடிஎம் மூடப்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவல் ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.
பொதுவாகவே, தற்போது பணத்தை வைத்து பரிவர்த்தனை செய்யும் வழக்கம் மக்களிடையே குறைந்து விட்டதை அடுத்து, டிஜிட்டல் பயன்பாடு தான் அதிகரித்துள்ளது. இதனால் ஏடிஎம்களின் தேவை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்றும், இன்னும் சில ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே ஏடிஎம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை பணம் அவசியம் தேவைப்பட்டால் வங்கி கிளைகளில் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தும் நாள் வெகு தூரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 15 ஏடிஎம் என்ற அளவில் தான் செயல்பட்டு வருவதாகவும், ஏடிஎம்மை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் செலவு உள்பட அனைத்தையும் கணக்குப் பார்க்கும் போது ஏடிஎம்கள் விரைவில் மூடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஏடிஎம்கள் முழுமையாக மூடப்படாது என்றும், மிகக் குறைந்த அளவில் மட்டுமே ஏடிஎம் சென்டர்கள் செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.