சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனுஷுக்கு எதிராக வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்த சமயத்தில் காதலித்திருந்த நயன்தாரா, அடுத்த சில ஆண்டுகளிலேயே திருமணமும் செய்து கொண்டிருந்தார். விக்னேஷ் – நயன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கும் நிலையில் அவர்களது திருமண வாழ்க்கையும் மிக அமோகமாக இருந்து வருகிறது.
ஒரு பக்கம் நயன்தாரா திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இதற்கிடையே தான் யாரும் எதிர்பாராத வகையில் மிக பரபரப்பான அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார். நயன், விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பாக ஒரு ஆவண பட வீடியோ, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகி இருந்தது.
தனுஷ் Vs நயன்தாரா..
ஆனால் என்ன காரணம் என்பதே தெரியாமல் நீண்ட நாட்களாக அது தாமதமாகி வந்த நிலையில் தான் நயன்தாராவின் அறிக்கையில் சில விஷயங்கள் தெரிய வந்தது. தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை அவர்களது திருமண வீடியோவில் பயன்படுத்தி இருந்தனர். ஆனால் அந்த படத்தின் உரிமை தனுஷிடம் இருந்ததால் ஒரு மூன்று நொடி காட்சிகளை பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்டும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
பதிலுக்கு அவர் பணமும் கேட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்த நயன்தாரா இசை நிகழ்ச்சி மேடையில் ரசிகர்கள் முன்பு பேசுவதை நிஜ வாழ்க்கையில் செய்யுங்கள் என்றும் இப்படி மூன்று வினாடிகளுக்கு 10 கோடி ரூபாய் கேட்பது தவறு என்றும் பலவிதமான கருத்துக்களை தனுஷ் பற்றி குறிப்பிட்டிருந்தார். இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஒரே நிகழ்ச்சியில் தனுஷ் – நயன்தாரா..
ஆனால் அதே நேரத்தில் நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் தளத்திற்காக பல கோடி ரூபாய்க்கு விற்றிருந்த நிலையில் தனுஷ் பணம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு என அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் தங்களது கருத்தை வெளியிட்டு வந்தனர். கடந்த ஒரு வாரமாக தனுஷ் நயன்தாரா தொடர்பான சர்ச்சை சம்பவம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வர, சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்திருந்தது மீண்டும் ஒருமுறை வைரல் ஆகி வருகிறது.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் என்பவரின் திருமணத்தில் தான் இவர்கள் இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அது மட்டும் இல்லாமல் ஒரு சில இருக்கைகளுக்கு இடைவெளியில் இருவரும் அமர்ந்து கொண்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.