உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் காரணமாக வேலை இழப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட DBS வங்கியும் மூன்று ஆண்டுகளில் 4,000 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஐ நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களால் செய்யப்படும் வேலைகளை மிக எளிதாக செய்து விட்டதால், பணியாளர்கள் தேவையற்ற நிலை ஏற்பட்டதாக வங்கி கூறியுள்ளது.
இந்த வகையில், தலைமை அதிகாரி குப்தா, வரும் 3 ஆண்டுகளில் 4,000 பேரை வேலை நீக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், ஏஐ தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறைகளில் 1,000 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
“நான் 15 ஆண்டுகளாக இந்த வங்கியில் செயல் அதிகாரியாக இருந்து வருகிறேன். பலமுறை வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் எனக்கு பிரச்சினையே இல்லை. ஆனால் ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு, புதிய வேலை வாய்ப்புகளை என்னால் உருவாக்க முடியவில்லை,” என்று அவர் வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த 4,000 வேலை இழப்புகள் தற்காலிகமானது என்றும், இனியும் அதிக வேலை இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது, டிபிஎஸ் வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், வேலை இழப்பவர்களில் அனைவரும் தற்காலிக ஊழியர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றும், நிரந்தர பணியாளர்களுக்கு வேலை இழப்பு என்பது ஏற்படாது என்றும் DBS வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.