தயாநிதி அழகிரி சிகிச்சை பெறும் வேலூர் மருத்துவமனைக்கு மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

By Bala Siva

Published:

 

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கடந்த சில மாதங்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த மருத்துவமனைக்கு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் முக அழகிரி மகன் தயாநிதி அழகிரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை அருகில் இருந்து அழகிரி உள்பட அவரது குடும்பத்தினர்  அவரது உடல் நலத்தை கவனித்து வருகின்றனர் என்பதும் அவர் சிகிச்சை பெரும் கட்டிடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூட இரண்டு முறை வேலூருக்கு சென்ற போது தயாநிதி அழகிரியை சந்தித்து நலம் விசாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த தயாநிதி அழகிரி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனையின் அலுவலகத்திற்கு நேற்று திடீரென மிரட்டல் இமெயில் வந்ததாகவும், அந்த இமெயிலில் தயாநிதி அழகிரி உயிருக்கு ஆபத்து என்று கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தயாநிதி அழகிரி சிகிச்சை பெற்று வரும் கட்டிடம் முழு காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் மிரட்டல் விடுத்த இமெயில் குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் அதன் ஐபி முகவரியை கண்டுபிடித்து இமெயில் அனுப்பிய நபரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மிரட்டல் இமெயில் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.