ஒன்றரை கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக, தன்னைப் போலவே இருக்கும் ஒருவரை கொலை செய்து பணத்தை பெற முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கே அந்த இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட உள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம் என்பவர் தொழிலில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தார். அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை கடன் இருந்ததாக தெரிகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ராம் திடீரென தனது ஆயுள் காப்பீட்டுப் திட்டம் நினைவிற்கு வந்தது. அந்தப் பணம் இறந்தால் கிடைக்கும் என்பதால், அவர் சினிமா பாணியில் ஒரு திட்டத்தை தீட்டினார்.
தன்னைப் போலவே இருந்த ராமுலு என்பவரை மது குடிக்க வைத்து, பின்னர் கொலை செய்துவிட்டு, அந்த உடலை தனது காரில் போட்டு, டீசல் ஊற்றி எரித்துவிட்டார். மேலும், தனது குடும்பத்தினரிடம் போன் செய்து, “காரில் சென்று கொண்டிருந்தபோது தீ பிடித்து விட்டது, நான் தப்பிக்க முயற்சி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், காரை கைப்பற்றிய காவல் துறையினர், எரிந்த உடல் ராம் என உறுதி செய்தனர். இதுகுறித்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ராம் உயிரோடு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரையும், அவருடன் இருந்த இரண்டு காதலிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில், கொலை செய்யப்பட்ட ராமுலுவின் குடும்பத்திற்கே ஒன்றரை கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.