காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரவீண் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான செய்திகள், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சில முன்னணி ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, காங்கிரஸை நவீனமயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரவீண் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு, கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நடந்தது என்று கூறப்படுவது, இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பல்ல, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.
ராகுல் காந்தியின் கண்ணசைவு இல்லாமல் பிரவீண் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்திருக்க மாட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது தி.மு.க.வுக்கு எதிரான ஒரு பேரம்பேசும் உத்தியாக இருக்கலாம்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர், குறிப்பாக இளம் காங்கிரஸ் எம்.பி.க்கள், தி.மு.க. கூட்டணியில் அதிருப்தியில் உள்ளனர். தொகுதி பணிகளில் எந்த மரியாதையும் இல்லை, தங்கள் பரிந்துரைகள் அமைச்சர்களால் ஏற்கப்படுவதில்லை, இதனால் தொகுதிப் பக்கம் செல்ல முடியவில்லை என்ற கோபம் அவர்களுக்கு உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 25 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றது. இந்த முறை தி.மு.க.வுக்குள் இருக்கும் ஒரு பிரிவினர், காங்கிரஸுக்கு 15 இடங்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்று பேசுவதும் அதிருப்தியை அதிகரித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் அரசியல் களத்தை திமுக ஆக்கிரமிப்பு செய்வதாக கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.
காங்கிரஸில் ஒரு சாரார், விஜய்யுடன் கூட்டணி வைத்தால் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால், இது அப்பட்டமான முட்டாள்தனமான பேச்சு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கேரளாவை பொறுத்தவரை, அங்கு உள்ளூர் அரசியல் மற்றும் இடதுசாரி vs காங்கிரஸ் மோதலே பிரதானம். அங்கே உள்ளூர் சினிமா நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரே அரசியலில் பெரிய தாக்கம் செலுத்தாதபோது, விஜய் செல்வாக்கு செலுத்துவார் என்பது எடுபடாத வாதம். இது வெறும் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி 99.99% தொடரும். சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கும் ஸ்டாலினுக்கும் இடையே உள்ள ‘நம்பிக்கையான புரிதல்’ காரணமாக இந்தக் கூட்டணி முறியாது. தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்க தி.மு.க. ஒரு வலுவான அங்கம் என்பதால், காங்கிரஸ் அதை இழக்க தயாராக இருக்காது.
தி.மு.க.வும் காங்கிரஸை இழக்க தயாராக இல்லை. ஏனெனில், தனித்து நின்றால் காங்கிரஸ் ஜீரோவாக இருந்தாலும், காங்கிரஸ் இல்லாவிட்டால் தி.மு.க.வால் 70 இடங்களுக்கு மேல் வெல்வது கடினம். சுமார் 40 முதல் 50 தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.
விஜய்யை சந்தித்துப் பேசுவது என்பது, தி.மு.க.வின் கூட்டணியில் ‘தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை’ சரிசெய்யவும், வரவிருக்கும் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்டு பெறுவதற்குமான சதுரங்க நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
