“மக்கள் யாரை மறந்தாலும் மன்னிப்பார்கள், ஆனால் திமுக அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா நாட்டு அரசும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கும். மக்களின் தேவைகளை எந்த அரசும் கவனித்ததில்லை” என்று கூறும் பத்திரிகையாளர் மணி, “அந்த அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டியதுதான் கூட்டணி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறை சுட்டிக்காட்டாமல் முட்டுக்கொடுத்து வருகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.
“ஆட்சியில் உங்களுக்கு பங்கு இல்லை, கூட்டணியும் ஆட்சி இல்லை. அப்படி இருக்கும்போது எதற்காக நீங்கள் முட்டுக் கொடுக்க வேண்டும்? தலித் விரோத செயல்கள் பல நடந்து கொண்டிருக்கும் போதும் நீங்கள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? உங்களை எப்படி தலித் மக்கள் மன்னிப்பார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தீண்டாமை காரணமாக தான் அறநிலையத்துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டது குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “2000 ஆண்டுகளாகத் தீண்டாமை இருக்கிறது” என்று பேசியுள்ளார். “2000 ஆண்டுகளாக உள்ள தீண்டாமையை நீக்க முடியாத திராவிட மாடல் அரசுக்கு எதற்காக நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்?” என்றும் பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பினார்.
மேலும், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மதுவுக்கு எதிரான மாநாட்டை நடத்தியது. இதெல்லாம் கேலிக் கூத்து” என்றும், “கள்ளச்சாராயத்தினால் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த சம்பவம் நடந்த சில நாட்களில், இந்த மாநாடு நடந்தது. மதுவிலக்கு மாநாட்டில் திமுக அமைச்சர்களும் இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்த அவர், “இதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்” என்றும் தெரிவித்தார்.
“அரசே மது விற்றுக் கொண்டிருக்கிறது. அந்த மதுவை விற்க வேண்டாம் என்று கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறாமல், ‘மதுவிலக்கு மாநாடு’ என்று ஒரு மாநாட்டை நடத்தி, அந்த மாநாட்டில் அமைச்சர்களையும் உட்கார வைத்ததே மக்கள் கேலிக்கூத்து என்று சிரித்து வருகிறார்கள்” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இருந்து ஒருவேளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கிதான் செல்வார்கள் என்றும் பாஜக இல்லாத அதிமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் விஜய்யுடனும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் விஜய்க்கு நாளுக்கு நாள் வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுவதால் விஜய் தலைமையிலான கூட்டணியை திருமாவளவன் ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் அடுத்த எட்டு மாதங்களில் திமுக கூட்டணி உடையுமா? அதிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறுமா? அப்படியே வெளியேறினாலும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் என்ன முடிவு எடுப்பார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
