டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தியாவின் மீதான வெளியுறவு கொள்கை ஒரு மிகப்பெரிய மூலோபாயத் தவறு என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்தும் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க-இந்தியா உறவுகளின் வரலாறு
கிளிண்டன் நிர்வாகம்: 2000-ஆம் ஆண்டில் அதிபர் கிளிண்டனின் இந்திய வருகை ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. அது இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய, வலுவான உறவை தொடங்கியது.
ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகம்: இந்த நிர்வாகம் வளர்ந்து வரும் சீனாவிற்கு ஒரு முக்கிய எதிர் சக்தியாக இந்தியாவை கருதியது. இந்தியாவின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்ட சர்வதேச தனிமையைப்போக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அது வழங்கியது. இது இரு நாடுகளின் உறவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஒபாமா நிர்வாகம்: ஒபாமா நிர்வாகம், ஆசியாவில் தனது முக்கிய கொள்கைக்கு இந்தியாவை மையமாக கருதியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதை ஆதரித்ததுடன், வர்த்தகத்தையும் அதிகரித்தது.
முதல் ட்ரம்ப் நிர்வாகம்: இந்த நிர்வாகம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைப்பான ‘குவாட்’ (Quad) குழுவிற்கு முக்கியத்துவம் அளித்ததுடன், ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே தனிப்பட்ட உறவையும் வளர்த்தது.
பைடன் நிர்வாகம்: அதிபர் பைடன் இந்தியாவுடன் நட்பை தொடர்ந்ததுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தார்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா அணிசேரா கொள்கையை கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் பொறுமையான ராஜதந்திரம் காரணமாக இரு நாடுகளின் நலன்களும் படிப்படியாக ஒன்றுடன் ஒன்று இணக்கமாகி வந்தது.
ஆனால் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான அணுகுமுறை மற்றும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விதிக்கப்பட்ட வரி, முன்னாள் அமெரிக்க அதிபர்களின் கட்டிக்காத்த நட்பை முடக்கியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம், சிரியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு உயர் மட்டப் பட்டியலில் இடம் அளித்துள்ளதுடன், அதன் பொருளாதாரத்தை அவமானப்படுத்தியும் உள்ளது.
பாகிஸ்தான் இராணுவ தலைவரை ட்ரம்ப் சந்தித்தது மற்றும் ட்ரம்ப் குடும்ப ஆதரவு பெற்ற ஒரு நிறுவனம் பாகிஸ்தானின் தேசிய க்ரிப்டோ கவுன்சிலுடன் தொடர்பு வைத்திருப்பது போன்றவை ரகசிய உடன்பாடுகள் குறித்த சந்தேகங்களை எழுப்புகின்றன.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த திடீர் கொள்கை மாற்றம், இந்தியாவில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கா ஒரு நம்பகத்தன்மையற்ற நாடு என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதற்கும், சீனாவுடன் உறவுகளை சரிசெய்வதற்கும் வாய்ப்புள்ளது என்றும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் கொள்கை மாற்றம், இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால நட்புறவுக்கு ஒரு பின்னடைவாக அமையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிரம்பின் தவறான நிர்வாகத்தால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பொருளாதார ஆபத்து வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் டிரம்ப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷம் வலுத்து வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
