அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான வர்த்தகப் போர், அமெரிக்காவின் விவசாய பொருளாதாரத்தின் முதுகெலும்பையே உடைத்துவிட்டது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள், அமெரிக்க விவசாயிகளை உலக சந்தைகளில் இருந்து தனிமைப்படுத்தி, பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளன.
ட்ரம்ப்பின் வர்த்தகப் போரினால், சீனாவுக்கான அமெரிக்க விவசாய பொருட்களின் ஏற்றுமதி முற்றிலும் நின்றுவிட்டது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு ஒரு பெரிய இழப்பாகும்.
அமெரிக்காவின் முக்கிய வர்த்தக துறைமுகங்களான ஓக்லாண்ட் போன்ற இடங்களில் ஏற்றுமதி நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்துவிட்டன. கப்பல்கள் சரக்கு இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன.
ஐயோவா முதல் வாஷிங்டன் வரையிலான மாநிலங்களில், விவசாயிகளின் தானிய கிடங்குகள் விற்கப்படாத பயிர்களால் நிரம்பி வழிகின்றன. ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிராமப்புறங்களில் வேலையின்மை பெருகி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
சீனா, அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்வதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டதாக தெரிகிறது. குறிப்பாக அமெரிக்காவின் சோளம் ஏற்றுமதி 94% சரிந்துள்ளது. சோயாபீன்ஸ் மற்றும் பிற தானியங்களை வாங்குவதற்காக பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிடம் சீனா ஒப்பந்தம் செய்யவுள்ளது.
இந்த வர்த்தகப்போர், பாதாம், பால் பொருட்கள், இறைச்சி போன்ற மதிப்புமிக்க ஏற்றுமதி பொருட்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ட்ரம்ப்பின் கொள்கைகள் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதை காட்டுகின்றன.
அமெரிக்க சோயாபீன்ஸ் சங்கம் மற்றும் தேசிய விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகள், இந்த வர்த்தக போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
மொத்தத்தில் ட்ரம்ப்பின் கொள்கைகள் விவசாயிகளை பாதுகாப்பதாக கூறப்பட்டாலும், அவை உண்மையில் விவசாய துறையை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. இந்த வர்த்தகப்போர், அமெரிக்காவின் விவசாய பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
