மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்கு “என் பி எஸ் வாத்சல்யா என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்ட NPS என்ற தேசிய ஓய்வூதிய திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது குழந்தைகளுக்கான முதலீடாக NPS வாத்சல்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய், மேலும் அதிகபட்சமாக எந்த விதமான வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு பணத்தை வெளியே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. குழந்தை 18 வயதை தொடுவதற்கு முன் மூன்று முறை இவ்வாறு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். கல்வி, மருத்துவ தேவைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
ஒருவேளை குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், பெற்றோரின் கணக்கில் மொத்த பணமும் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், குழந்தைகள் 18 வயதை தாண்டிய பின்பு அந்த கணக்கு தானாகவே NPS என்ற தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். ஒருவேளை பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினால், குழந்தைகளின் தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது.