ஆளுநர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்..? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

அண்ணா பல்கலை விவகாரம் உள்ளிட்ட பல பரபரப்பான அரசியல் சூழலில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிப்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தை போது தமிழக…

CM Stalin vs RN Ravi

அண்ணா பல்கலை விவகாரம் உள்ளிட்ட பல பரபரப்பான அரசியல் சூழலில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிப்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தை போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அண்ணா பல்கலை. விவகாரம் குறித்து ஆளுநர் தலையிடக் கோரி கோஷம் எழுப்பினார். மேலும் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் யார் அந்த சார் பதாகைகளை ஏந்தியும், பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்புகளைக் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையைப் புறக்கணித்த கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை இசைக்கக் கூறினார். ஆனால் தேசிய கீதம் இசைக்கப்படாததால் உடனே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். இதனைத் தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது என ஆளுநர் மாளிகை எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டது.

தேசிய கீதம் அவமதிப்பு? ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையிலிருந்து வெளியேறிய கவர்னர்!

இந்நிலையில் கடந்த வருடம் போலவே ஆளுநர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வெளிநடப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பதிவில்,

”அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் @rajbhavan_TN
. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.

தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

“தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று ஆளுநரின் செயல் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.