சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அதாவது 17 தினத்தில் விடுமுறை விடுவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று முழுவதும் மழை பெய்யாததால் இரவு பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நாளை விடுமுறை அளிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சிப் பகுதியில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அது சென்னை மற்றும் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு மழை ஆபத்து குறைந்துள்ளதாகவும், சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று காலை முதல் பெரிய அளவில் மழை இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளை கரையை கடக்கும் போது சென்னையில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து விடுமுறை அளிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, நாளை காலை 7 மணிக்குதான் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.