அமெரிக்காவுக்கு வணிகம், சுற்றுலா அல்லது உறவினர்களை பார்க்கச் செல்ல காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விசா நேர்காணலுக்கான காத்திருப்பு நேரத்தில், இந்தியாவிலேயே மிக வேகமாக செயல்படும் மையமாக சென்னை உருவெடுத்துள்ளது. இது டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களை தாண்டி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறையின் சமீபத்திய தரவுகளின்படி, வணிகம் அல்லது சுற்றுலா விசா நேர்காணலுக்கான சராசரி காத்திருப்பு நேரம் சென்னையில் தற்போது வெறும் இரண்டரை மாதங்கள் மட்டுமே! இது இந்தியாவின் அனைத்து முக்கிய அமெரிக்க தூதரகங்களிலும் மிக விரைவான காலக்கெடுவாகும்.
டெல்லியில் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கான அடுத்த தேதி கிடைக்க 12 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. கொல்கத்தாவில் காத்திருப்பு நேரம் ஐந்தரை மாதங்களுக்கு மேல் நீண்டுள்ளது. அதேபோல் மும்பையில் சராசரி காத்திருப்பு சுமார் நான்கரை மாதங்கள். ஹைதராபாத் நிலைமை சீராக சுமார் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்புவரை, சென்னை விசா மையம்தான் அதிக காத்திருப்பு கொண்ட மெதுவான மையங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், பணியாளர்களை அதிகரித்ததன் மூலமும், டிஜிட்டல் முறையில் விண்ணப்பங்களை முன்கூட்டியே பரிசீலிக்கும் புதிய நடைமுறைகள் மூலமும், சென்னை தனது நிலுவைகளை வேகமாக சரிசெய்து இந்த சாதனை இடத்தை பிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய விண்ணப்பதாரர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்தாலும், மறுபுறம் வாஷிங்டன் வெளியிட்டுள்ள புதிய விதிமுறை, விசா நடைமுறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை இனி, விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் குடியிருக்கும் நாட்டிலிருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது.
நீண்ட காத்திருப்பு நேரத்தை தவிர்க்க, துபாய், தோஹா அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் சில வாரங்களுக்குள் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று விசா வாங்கும் நடைமுறை இனி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு, இந்தியாவிற்கு உள்ளேயே உள்ள விசா மையங்களில் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் வரும் மாதங்களில் காத்திருப்பு நேரம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, டிரம்ப் நிர்வாகம் செப்டம்பர் 19 அன்று, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் H1B விசாவுக்கு $100,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த நாளே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டது: இந்த புதிய கட்டணம் புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட H1B விண்ணப்பங்களுக்கோ இந்த விதி பொருந்தாது.
குடியேற்ற வல்லுநர்கள் கருத்துப்படி, இந்தக் கட்டண உயர்வு, அடுத்த நிதியாண்டில் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் திட்டங்களை வெகுவாக மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.
மொத்தத்தில், ஒருபுறம் சென்னையின் செயல்திறன் விசா காத்திருப்போருக்கு ஆறுதல் அளித்தாலும், வசிப்பிட நாட்டிலிருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை, சென்னை உள்பட அனைத்து இந்திய விசா மையங்களின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
