அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது iPhone 14 Pro Max மாடல் போனை சார்ஜில் வைத்திருந்தபோது திடீரென வெடித்ததாகவும், அதனால் அந்த பெண்ணுக்கு கை மற்றும் பின்புறம் தீக்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி, ஐபோன் வெடித்து சிதறிய போது, படுக்கை அறையில் இருந்த போர்வை சேதமடைந்ததோடு சுவர்களும் கருகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் காலை ஆறு முப்பது மணியளவில் நடந்ததாகவும், முதற்கட்ட விசாரணைகளில் நீண்ட நேரம் சார்ஜ் போட்டதால் பேட்டரி சூடாகி வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் உடனடியாக சில அப்டேட்டுகளை வழங்கியதோடு, செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் வெடித்தால் வாரண்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றை எங்களிடம் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
பயனர்களின் பாதுகாப்பு தங்களுக்கு முக்கியம் என்றும், சார்ஜ் செய்யும் போது வெடிப்பது போன்ற பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
பொதுவாக நீண்ட நேரம் சார்ஜ் போடுவது, குறிப்பாக தூங்கும் போது சார்ஜில் வைத்து அதிகாலை வரை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், சார்ஜ் முழுமையாக ஆன உடன் உடனடியாக சார்ஜில் இருந்து போனை துண்டிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.