சீனாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த வீடியோ உரையாடல் செயலி, Google Play-யில் 10,000-க்கு மேற்பட்ட பதிவிறக்கங்களை பெற்றுள்ளது. ஆனால் இந்த செயலியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் தவறாக காண்பிக்கப்பட்டதோடு, லட்சத்தீவுகள் முழுமையாக விட்டு விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 1990-ஆம் ஆண்டு குற்றச்சட்ட சட்டத்தை மேற்கோளாக குறிப்பிடப்பட்டு நாட்டின் எல்லைகளை தவறாக காட்டுவது சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் வழங்கக்கூடிய குற்றமாகும் என்று எச்சரித்துள்ள மத்திய அரசு இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-ஐ மேற்கோளாகக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட செய்லியை மிக விரைவில் நீக்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ‘Ablo’ செயலி Google Play Store-இல் இயங்கிக் கொண்டிருந்தாலும், Apple App Store-இல் அது காணப்படவில்லை. விரைவில் Google Play Storeலும் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு World Map Quiz மற்றும் MA 2 – President Simulator உள்ளிட்ட செயலிகள் இந்திய எல்லைகளை தவறாகக் காட்டியதற்காக MeitY மற்றும் SoI இதே போன்ற நடவடிக்கையை எடுத்தனர்.
2021ஆம் ஆண்டு Twitter India-வின் முன்னாள் நிர்வாகி மனீஷ் மகேஷ்வரி மீது, இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டியதற்காக உத்தரப்பிரதேச காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Tweep Life என்ற Twitter-ன் தளத்தில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவுக்கு வெளியே காட்டப்பட்டிருந்தது. இது பயனாளர் ஒருவர் மூலம் எச்சரிக்கப்பட்டதும் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியது. பின்னர் அந்த வரைபடம் திருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.