ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியளிப்பது அரசின் கடமை. அனுமதி மறுக்க விரும்பினால், அதை தெளிவாக தெரிவிக்கலாம். அதுவும் அரசின் உரிமை. ஆனால், தற்போது விஜய் மற்றும் அவரது கட்சிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் த.வெ.க. என்ற கட்சியே இருக்கக் கூடாது, இனி தவெக தலைவர்கள் அரசியல் பரப்புரைகள் செய்யக் கூடாது, நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற பல கடுமையான கோரிக்கைகளை முன்வைக்கின்றன. இது ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வா அல்லது தற்செயலான நிகழ்வுகளா என்ற குழப்பம் நிலவிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக அரசியலில் எதிரியை அழிப்பது தான் வெற்றி. ஆனால் அந்த வெற்றி ஜனநாயகரீதியாக இருக்க வேண்டும். மக்களின் ஆதரவால் தேர்தலில் வெற்றி பெற்றி எதிரியை ஒழிக்க வேண்டும், அல்லது தோற்கடிக்க வேண்டும். ஆனால் எதிரியை தேர்தல் களத்திற்கே வரவிடாமல், போட்டியே போட விடாமல் வீழ்த்த நினைப்பது என்னவிதமான ஜனநாயகம்?
விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட நபர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி இல்லாமல் சென்றால், மீண்டும் ஒருமுறை கூட்டம் கூடி அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதுவே அவருக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்ய மற்றொரு காரணமாக அமைந்துவிடும். இதனால்தான் அவர் அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்கிறார்.
ஆனால் சமூக வலைத்தளங்களில் விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல கூட வரவில்லை என கீழ்த்தரமான அரசியல் செய்து வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல் துறையின் மெத்தன போக்கை கடுமையாக விமர்சித்தார். 500 பேர் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், உண்மையில் 100 பேர் கூட இல்லை என்றார். உளவுத்துறை சரியான நேரத்தில் தகவல் கொடுக்காதது, கூட்டத்தை கட்டுப்படுத்தத் தவறியது, நிரந்தர டிஜிபியை நியமிக்காதது போன்ற தவறுகளை அண்ணாமலை சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், விஜய் கூட்டத்தை சனிக்கிழமை வைத்து இளைஞர்களையும் குழந்தைகளையும் வரவழைத்தது தவறு என்றும், அவரது கட்சியில் இன்னும் இரண்டாம் நிலை தலைவர்கள் உருவாகவில்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால் அவர்களால் மட்டுமே கூட்டத்தைக்கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். மேலும் இந்திய விமானப்படை கூட்டத்திலும் அசம்பாவிதம், விஜய் கூட்டத்திலும் அசம்பாவிதம், மொத்தத்தில் தமிழக அரசுக்கு கூட்டத்தை சமாளிக்க தெரியவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்தச் சம்பவம், அரசியல் களத்தில் நேர்மையும், பொறுப்பும் இல்லாமல் செயல்படுபவர்களை அம்பலப்படுத்துகிறது. சீமான், பிரேமலதா, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற பல தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், வெறும் ஆதரவு மட்டும் போதாது. எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கூட்டத்துக்குள் நுழையும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்களின் செயல்பாடுகளை வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். இதுவே த.வெ.க. போன்ற கட்சிகளை காப்பாற்றுவதற்கான ஒரே வழி. 40 உயிர்களைப் பலிகொடுத்து நாம் கற்றுக்கொண்ட இந்தப் பாடம், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உதவும் என்று நம்புவோம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
