மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து பலரும் ஆய்வு செய்து வரும் நிலையில், ஒருசிலர் இன்றும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளனர். மனித ஆன்மா, இறந்த பிறகு மற்றொரு உடலில் மீண்டும் பிறக்கிறது என்பதை நம்ப வைக்கும் பல நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. சமீபத்தில், மறுபிறவி குறித்துப்பேசுவதாக கூறப்படும் இரண்டு வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. அதில் ஒன்று மகாத்மா காந்தியையே வியக்க வைத்த ஒரு இந்திய பெண்ணின் கதை, மற்றொன்று அமெரிக்க சிறுவனின் கதை.
இந்தியப் பெண்ணின் மறுபிறவி கதை
சாந்தி தேவி: 1926-ல் பிறந்த சாந்தி தேவி என்ற பெண்ணின் கதைதான் அது. தனது நான்காவது வயதில், சுமார் 75 மைல் தொலைவில் உள்ள மதுரா நகரில் தான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கை குறித்து அவள் பேச தொடங்கினாள். தான் முந்தைய பிறவியில் லுடி என்ற பெயரில் இருந்ததாகவும், 1925-ல் ஒரு மகனை பெற்றெடுத்த பிறகு இறந்ததாகவும் கூறினாள்.
மகாத்மா காந்தியின் ஆர்வம்: சாந்தியின் பெற்றோர்கள், லுடியின் கணவரான கேதார்நாத்துக்கு கடிதம் எழுதியபோது, சாந்தி சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருந்தன. சாந்தியை மதுராவுக்கு அழைத்து சென்றபோது, அவள் தனது பழைய வீட்டைக் கண்டுபிடித்து, கூட்டத்தில் இருந்த லுடியின் பெற்றோர்களையும் அடையாளம் காட்டினாள். இந்த சம்பவம் மகாத்மா காந்தியின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் ஒரு குழுவை அமைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த குழுவால் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு “விஞ்ஞானபூர்வமான விளக்கத்தையும்” அளிக்க முடியவில்லை. சாந்தி தேவியின் கதை, 1994-ல் சுவீடன் எழுத்தாளர் ஒருவரால் புத்தகமாக எழுதப்பட்டு, 1998-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
அமெரிக்கச் சிறுவனின் விசித்திரமான கூற்று
லூ கெஹ்ரிக்: 2009-ல் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் என்ற சிறுவன், தான் ஒரு பிரபல பேஸ்பால் வீரரான லூ கெஹ்ரிக் என்று கூறினான். அவனது பெற்றோர் முதலில் இதை நம்பவில்லை. ஒரு நாள், பேஸ்பால் வீரர் பேப் ரூத்தின் படத்தை பார்த்த கிறிஸ்டியன், “அவர் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்” என்று கூறினான். பின்னர், ஒரு குழு புகைப்படத்தில் இருந்த லூ கெஹ்ரிக்கை அடையாளம் காட்டி, தான் இப்படித்தான் இருந்ததாக தெரிவித்தான்.
ஆராய்ச்சியும் உறுதிப்படுத்தலும்: அப்போது இரண்டு வயதான கிறிஸ்டியனுக்கு, பேஸ்பால் குறித்து எதுவும் தெரியாது. அவனது தாய் கேத்தி பேர்ட், இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்தபோது, பல ஆச்சரியமான ஒற்றுமைகளை கண்டறிந்தார். கெஹ்ரிக் 1941-ல் இறந்துவிட்ட நிலையில், கிறிஸ்டியன் அவரது மரணம் குறித்தும், பொதுவெளியில் அறியப்படாத கெஹ்ரிக்கின் பெற்றோரின் பெயர்கள் குறித்தும் துல்லியமாக தெரிவித்தான். இந்த அனுபவங்கள் குறித்து கேத்தி பேர்ட் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். கிறிஸ்டியனுக்கு ஐந்து வயதானபோது, இந்த நினைவுகள் மங்க தொடங்கின.
இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்பதற்கு எந்தவொரு உறுதியான விஞ்ஞானபூர்வமான விளக்கமும் இல்லை என்றாலும், மறுபிறவி குறித்த இந்த சம்பவங்கள், மனித மனத்தில் உள்ள கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
