பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் தங்களின் பிரசவம் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே நினைப்பார்கள். சுகப்பிரசவம் முடியாத பட்சத்தில் தான் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்வார்கள். சுகப்பிரசவம் நடப்பதற்கு உடல் அளவில் வலிமை மிகவும் முக்கியம். நல்ல சத்தான உணவுகளை உண்பது மட்டுமின்றி உடலுக்கு போதுமான உடற்பயிற்சியும் இருத்தல் வேண்டும். அதனால்தான் அந்த சமயத்தில் வீட்டு வேலைகளை குனிந்து நிமிர்ந்து கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். கர்ப்ப காலத்தில் இரண்டாம் மூன்று மாத காலத்தில் மருத்துவர்கள் சில உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்வார்கள்.
இந்த உடற்பயிற்சிகள் பிரசவத்தின் போது பெண்கள் உடலில் உள்ள எலும்புகள், தசைகள் ஆகியவற்றை பிரசவத்திற்கு தகுந்தவாறு தயார்படுத்தி விடும். பிரசவம் சற்று எளிமையாக நடக்க துணை புரியும். அவ்வாறான ஒரு உடற்பயிற்சி தான் பட்டாம்பூச்சி ஆசனம்.

பட்டாம்பூச்சி ஆசனம் செய்யும் முறை:
- முதலில் தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் நீட்டிக் கொள்ள வேண்டும். முதுகு நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.
- பிறகு ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு இரண்டு கால்களின் பாதங்களையும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்க வேண்டும். கால்களை உடலோடு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த நிலையில் முழங்கால்கள் தரையில் படக்கூடாது.
- தொடை இரண்டும் சமநிலையில் தரையில் இருக்கும் படி வைத்துக் கொள்ளவும். முதுகு வளைந்த நிலையில் இருக்கக் கூடாது.
- இந்த நிலையில் உங்கள் தொடைகள், இடுப்புகள் ஆகியவற்றில் உள்ள தசை பகுதிகள் நீட்டிக்கப்படுவதை உணரலாம்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் அமர்ந்திருக்க வேண்டும் அதன் பின் மீண்டும் காலை மெதுவாக நீட்ட வேண்டும்.
- இதே போல் இரண்டு மூன்று முறை செய்யலாம்.
- பெரும்பாலும் காலை வேளை யோகாசனம் செய்ய உகந்த நேரம் ஆகும்.
பட்டாம்பூச்சி ஆசனத்தால் விளையும் நன்மைகள்:

சுகப்பிரசவம் எளிதாக நடைபெற இந்த பட்டாம்பூச்சி ஆசனம் உதவுகிறது. இடுப்பு பகுதியில் உள்ள தசை நார்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றை இது வலுப்படுத்துவதால் பிரசவ காலத்தில் உடலை தயார் நிலையில் வைத்திருக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தேவையற்ற மன அழுத்தங்களை நீக்கி மனதை தளர்வாக வைத்திருக்க இந்த யோகாசனம் பெரிய அளவில் உதவி புரியும்.
உடலில் குறிப்பாக கால் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இதனால் கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்குவதிலிருந்து காத்திடும்.
கர்ப்பகால இடுப்பு வலி பிரச்சனைக்கும் சிறந்த நிவாரணியாக இந்த யோகாசனம் விளங்குகிறது.
கடுமையான கர்ப்ப கால இடுப்பு வலி?? இந்த 7 வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்!
இடுப்புப் பகுதிகள் மற்றும் கால் பகுதிகளை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.
மலச்சிக்கல் தொந்தரவு ஏற்படாமல் காத்திடும்.
இந்த ஆசனம் கர்ப்பிணி பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? என்று கேட்டால் இல்லை அனைவருக்கும் செய்யலாம். இடுப்பு பகுதி, கால் பகுதிகளுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஒரு யோகாசனம். பெண்களின் மாதவிடாய் தொந்தரவு, நீர்க்கட்டி பிரச்சனை போன்றவற்றையும் சரி செய்யும்.
கர்ப்ப காலத்தில் ஏதேனும் சிக்கல் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையை பெற்ற பின்பு இந்த யோகாசனத்தை செய்யலாம்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

