அணில் கும்ப்ளேவின் தனித்துவமான ரெக்கார்டும் இப்ப காலி.. பல நாள் கழிச்சு வேட்டு வைத்த பும்ரா..

டெஸ்ட் அரங்கில் பல இந்திய பந்து வீச்சாளர்கள் தங்கள் பக்கம் வைத்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து நொறுக்கி வரும் பும்ரா, தற்போது அணில் கும்ப்ளேவின் மிக முக்கியமான ஒரு சாதனையையும் அடித்து நொறுக்கி உள்ளார்.…

Bumrah break Kumble Record

டெஸ்ட் அரங்கில் பல இந்திய பந்து வீச்சாளர்கள் தங்கள் பக்கம் வைத்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து நொறுக்கி வரும் பும்ரா, தற்போது அணில் கும்ப்ளேவின் மிக முக்கியமான ஒரு சாதனையையும் அடித்து நொறுக்கி உள்ளார். தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி என்றாலே உடனடியாக நம் அனைவரது நினைவுக்கும் வரும் ஒரே பெயர் பும்ரா மட்டும்தான்.

அந்த அளவுக்கு போட்டியில் இருக்கும் பல நெருக்கடியான சூழல்களை தனது பந்து வீச்சு மூலம் இந்தியாவின் பக்கமும் பும்ரா திருப்பி வருகிறார். நீங்கள் யார் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் இல்லை என்றாலும் மற்ற பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுத்தாலும் இல்லை என்றாலும் எனது பணியை நான் இப்படித்தான் செய்வேன் என்பதில் மிகத் தெளிவாக இருந்து வருகிறார் பும்ரா.

ஆஸ்திரேலிய அணியில் ஹெட், ஸ்மித், மார்னஸ், கவாஜா என அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும் அவர்களைப் பார்த்து எல்லாம் கொஞ்சம் கூட அசராமல் விக்கெட் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாகவும் வைத்து வருகிறார் பும்ரா.

அசராத பும்ரா

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த பும்ரா தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்டிலும் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அப்போது அவரது பந்து வீச்சில் நிறைய பவுண்டரிகள் போனாலும் அதைப் பற்றி கொஞ்சம் கூட உடைந்து போகாமல் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை ஒட்டுமொத்தமாக நொறுக்கி இருந்தார்.

கும்ப்ளேவை தாண்டிய பூம் பூம் பும்ரா

இதனால் ஆரம்பத்தில் அவர்கள் தடுமாற்றம் கண்டாலும் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த ஒரு டெஸ்டில் மட்டும் இதுவரை 52 ஓவர்களை பும்ரா வெவ்வேறு ஸ்பெல்களில் வீசி உள்ளார். இதனால் அவர் மீது நெருக்கடிகளும் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் சேனா (SENA) நாடுகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் தற்போது பும்ரா பெற்றுள்ளார்.

சேனா மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த ஆசிய பந்து வீச்சாளராக பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் (146 விக்கெட்டுகள்) உள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்திய பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே 141 விக்கெட்களுடன் இருந்து வந்த சூழலில் தான் அதனை முறியடித்த பும்ரா தற்போது 142 விக்கெட்டுகளுடன் SENA நாடுகளில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது ஆசிய பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும், முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.