ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று நவ.13-ல் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எஞ்சியுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் நவம்பர் 11-ல் முடிவடைந்த முதற்கட்ட தொகுதிகளுக்கான பிரச்சாரத்தில் பா.ஜ.கூட்டத்தில் பாலிவுட் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியுமான மிதுன் சக்கரவர்த்தி பங்கேற்று ரோட் ஷோ மற்றும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் நிர்சா சட்டமன்றத் தொகுதிக்குட்பட் தன்பாத் பகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அபர்ணாசென் குப்தாவுக்கு ஆதரவு கேட்டு பிரம்மாண்ட ரோட்ஷோ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸை யாரோ பிக்பாக்கெட் அடித்தனர். இதனை அறியாத மிதுன் சக்கரவர்த்தி தனது பர்ஸை தேட காணாது இருப்பது கண்டு அதிர்ந்தார்.
பின்னர் ரோட்ஷோ நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூற அவர்கள் மேடையில் ஏறி மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸ் திருடப்பட்டுள்ளது. எனவே கூட்டத்தில் எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் கொடுத்து விடவும். அவர் நமக்காகத்தான் வந்திருக்கிறார் என்று பேசினர். ஆனால் கூட்டத்தில் எந்த பதிலும் வரவில்லை. மேலும் பர்ஸும் திரும்பக் கிடைக்கவில்லை. இதனால் மிதுன் சக்கரவர்த்தி ஏமாற்றமடைந்தார். மேலும் தனது ரோட் ஷோ நிகழ்ச்சியையும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
கல்கத்தாவில் பிறந்த மிதுன் சக்கரவர்த்தி இந்தி மற்றும் பெங்காலிப் படங்களில் முக்கிய நடிகராக அறியப்படுகிறார். மூன்று தேசிய விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்டவைகளைப் பெற்ற மிதுன் சக்கரவர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. பாலிவுட்டில் ஒரே ஆண்டில் 19 படங்களில் ஹீரோவாக நடித்த ஒரே பெருமைக்குரியவர் என்ற சாதனையைப் பெற்றிருக்கிறார் மிதுன் சக்கரவர்த்தி. இன்றுவரை அந்த சாதனை உடைக்கப்படவில்லை.
சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக தனி அறக்கட்டளையை வைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வரும் மிதுன் சக்கரவர்த்திக்கு சமீபத்தில் இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதும் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது.