தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வு, அவர் கட்சியை தொடங்கியதில் இருந்து அதிகபட்ச நெருக்கடியை இப்போது எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தின் தீவிரத்தன்மை, தமிழக அரசியலில் தனியாக செயல்படுவது எவ்வளவு கடினம் என்பதை விஜய்க்கு நேரடியாக உணர்த்தியுள்ளது. எனினும், இந்த சவாலை அவர் எதிர்கொள்ளும் விதம், இன்னும் குழப்பமும், தயக்கமும் நிறைந்ததாகவே தெரிகிறது.
கிணற்றில் விழுந்த் கல் போல, விஜய் ஏன் அமைதி காக்கிறார், அவருக்கு முன் இருக்கும் கூட்டணி சவால்கள் என்னென்ன, ராகுல் காந்தி மற்றும் பா.ஜ.க.வின் மிரட்டல் தொனிக்கு பின் உள்ள அரசியல் என்ன என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் தரப்பில் இருந்து வெளிப்படும் அமைதி, அவர் இன்னும் ஒரு சரியான அரசியல் முடிவை எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது. தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் எந்தவொரு திடமான அறிவிப்பும் இல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தை மட்டும் நேற்று வீடியோ கால் மூலம் சந்தித்திருப்பது, இது ஒரு ‘சினிமாத்தனமான’ பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
அரசியல் களம் என்பது படப்பிடிப்பு தளம் அல்ல; தனித்து நின்று சாதிக்க முடியாது என்பதை விஜய் தெளிவாக புரிந்துகொண்டார். எந்த பெரிய கட்சியுடன் கைகோர்ப்பது என்பதுதான் தற்போது அவர் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. அவர் எடுக்க போகும் இந்த முடிவுதான் 2026 தேர்தலையும், அவரது எதிர்கால அரசியலையும் தீர்மானிக்க போகிறது.
விஜய் தரப்பு பா.ஜ.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவது குறித்து ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இந்த தயக்கத்திற்கு முக்கியமான காரணம், அவர் கட்டமைக்க விரும்பும் அரசியல் பிம்பம் ஆகும்.
அரசியலுக்கு வந்தபோது, தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தவர் விஜய். குறிப்பாக, பா.ஜ.க. குறித்தும் அவர் வெளிப்படையாக விமர்சனத்தை கடுமையாக தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில், அவர் திடீரென தனது கொள்கை எதிரி என்று அறிவித்த ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், தனது நம்பகத்தன்மையை இழப்பார்.
திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்று சக்தி என்ற பிம்பத்துடனேயே அவர் அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. இடம்பெறும் கூட்டணியில் இணைந்தால், அந்த ‘மாற்று’ என்ற பிம்பம் உடைந்துவிடும்; அது வெறும் ‘பத்தோடு பதினொன்று’ என்ற நிலைக்கு விஜய்யை கொண்டு செல்லும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தவிர்த்து, காங்கிரஸ் பக்கம் விஜய் இணைந்தால், அங்கும் விஜய்க்கு சில கவலைகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியை முழுமையாக நம்ப முடியாது என்று விஜய் யோசிப்பதாக தெரிகிறது. ஏனெனில், காங்கிரஸ் தேசிய அரசியலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. 2029 நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது 10 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக தொகுதிகள் வாங்குவதற்காக, ராகுல் காந்தி விஜய்யை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம் விஜய் மனதில் ஓடுகிறது. “விஜய்யை எங்களுடன் இணைப்போம் என தி.மு.க-வை மிரட்ட” ராகுல் காந்தி திட்டம் தீட்டினால், அது விஜய்யின் ஆரம்பகால அரசியலை வலுப்படுத்துவதற்கு பதிலாக, அவரை ஒரு பேரம் பேசும் பொருளாகவே நிறுத்திவிடும்.
எங்களுடன் வராவிட்டால், தனித்து நின்று உங்களால் அரசியல் செய்ய முடியாது. கரூர் போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும். பா.ஜ.க. பக்கம் வந்தால், இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்கலாம்” என்ற ரீதியில் மறைமுகமான அழுத்தங்கள் பாஜகவிடம் இருந்து வரலாம்.
அதே நேரத்தில் “வாருங்கள், சேர்ந்து அரசியல் செய்யலாம்” என்று ராகுல் காந்தி இனிமையாக அழைத்தாலும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் ஆகிய இரண்டில் ஒன்றுடன் கூட்டணி சேராவிட்டால், தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் நிலைத்திருப்பது கடினம் என்ற நிலை விஜய் முன் உள்ளது.
விஜய் இமேஜ் பற்றிய கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் களத்தில் நிற்க தேவையான துணிச்சலான முடிவை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் கலந்து பேசி, ஒரு முடிவை எடுத்து, அதில் உறுதியாக நின்று, தனது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உற்சாகத்தை அளிக்கும் ஒரு தலைவனாக அவர் மாற வேண்டும்.
இல்லையெனில், “விஜய் அரசியல் செய்ய லாயக்கில்லை” என்ற எண்ணம் அவருடைய கட்சி தொண்டர்களுக்கே ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அமைதி காக்கும் காலம் முடிந்துவிட்டது; விஜய்யின் அரசியல் எதிர்காலம், அவர் எடுக்கப்போகும் ஒரே ஒரு முடிவில் அடங்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
