தமிழக அரசியல் களத்தில் தொகுதி பங்கீடு என்பது எப்போதும் ஒரு சதுரங்க ஆட்டத்தை போன்றது. இந்த முறை அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி ஒப்பந்தம், அரசியல் விமர்சகர்கள் மட்டுமன்றி சொந்த கட்சித் தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ஏமாந்த சோணகிரி’யாக பாஜக மாற்றப்பட்டுவிட்டதோ என்ற குமுறல் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் சாதுர்யத்தால், பாஜகவிற்கு ஒதுக்கிய 27 தொகுதிகளில் சுமார் 20 தொகுதிகள் அக்கட்சிக்கு துளியும் வெற்றி வாய்ப்பு இல்லாதவை என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவலாக அடிபடுகிறது. தேசிய அளவில் அமித்ஷா போன்ற பெரும் ராஜதந்திரிகளையே தனது உள்ளூர் அரசியல் கணக்குகளால் எடப்பாடியார் ஏமாற்றிவிட்டாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ள நிலையில், தமிழக பாஜகவின் தற்போதைய தலைமை பலவீனமாக இருப்பதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, தமிழக பாஜகவின் முக்கிய முகங்களாக அறியப்படும் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் இருவரும் தொகுதி பங்கீட்டின் போது கட்சியின் நலனை விட, அதிமுகவின் நிபந்தனைகளுக்கு பணிந்து போய்விட்டதாக தெரிகிறது. தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள நயினார் நாகேந்திரனுக்கு, எந்தெந்த தொகுதிகள் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியாதா அல்லது தெரிந்தே கோட்டை விட்டாரா என்ற ஆதங்கம் நிலவுகிறது. அதேபோல், அனுபவம் வாய்ந்த தமிழிசை போன்றவர்கள் பேச்சுவார்த்தை குழுவில் இருந்தும், பாஜகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடமிருந்து போராடி பெற தவறியது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் கட்சியின் எதிர்காலத்தை விட தற்காலிக சமரசத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
அண்ணாமலை தற்போது மாநில தலைவராகவோ அல்லது களத்திலோ இருந்திருந்தால் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது. அண்ணாமலையின் அரசியல் பாணி என்பது எப்போதும் ஆக்ரோஷமானதாகவும், சமரசம் செய்து கொள்ளாததாகவும் இருக்கும். அவர் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு துணிச்சலாக பேசி, பாஜகவிற்கு சாதகமான மற்றும் வெற்றி வாய்ப்புள்ள 70 தொகுதிகளின் பட்டியலை முன்வைத்து வாதிட்டிருப்பார். அதிமுகவை விட அதிக வாக்கு சதவீதம் வாங்கிய இடங்களை குறிப்பிட்டு, அவற்றை அடம்பிடித்து வாங்கியிருப்பார். ஆனால், அவர் இல்லாத இடைவெளியை பயன்படுத்தி, எடப்பாடியார் தனக்கு சவாலான தொகுதிகளை பாஜகவின் தலையில் கட்டிவிட்டதாக கருதப்படுகிறது.
பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை திமுக அல்லது அதிமுகவின் கோட்டைகளாகவே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் பாஜகவிற்கு துளியும் அடிப்படை கட்டமைப்பு இல்லாத தொகுதிகளை திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். இது ஒருவகையில் பாஜகவை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. திருச்சி மேற்கு, ஒட்டஞ்சத்திரம் போன்ற கடினமான தொகுதிகளை அதிமுக தவிர்த்துவிட்டு, கூட்டணி தர்மம் என்ற பெயரில் பாஜக மற்றும் பிற கட்சிகளுக்கு தள்ளிவிட்டிருப்பது எடப்பாடியாரின் ‘மாஸ்டர் பிளான்’ என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இதனை புரிந்து கொள்ளாமல் கையெழுத்திட்ட பாஜக மேலிட பிரதிநிதிகள் மீதே இப்போது விமர்சன கணைகள் பாய்கின்றன.
பியூஷ் கோயல் போன்ற மேலிட பார்வையாளர்கள் கூட, தமிழகத்தின் தரைமட்ட யதார்த்தத்தை உணராமல், உள்ளூர் தலைவர்கள் கொடுத்த அறிக்கையை நம்பி ஏமாந்துவிட்டதாக தெரிகிறது. டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழக அரசியலை கணிப்பது சாத்தியமில்லை என்பதை இந்த தொகுதி பங்கீடு உணர்த்துகிறது. அமித்ஷா போன்றவர்கள் தமிழக பாஜகவின் உண்மையான பலத்தை புரிந்து கொள்ள தவறிவிட்டார்களா அல்லது அதிமுகவின் தயவு தங்களுக்கு தேவை என்று நினைத்து இவ்வளவு தாராளமாக தொகுதிகளை விட்டு கொடுத்தார்களா என்ற விவாதம் ஒருபுறம் நடந்தாலும், இது பாஜக தொண்டர்களின் உத்வேகத்தை பெருமளவில் பாதித்துள்ளது. வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளில் தேர்தல் வேலை செய்வது வீண் வேலை என்ற மனநிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் இந்த தேர்தல் களம் பாஜகவிற்கு ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்பித்துள்ளது. வெறும் மேலிட உறவுகளை மட்டும் நம்பி தேர்தலை சந்திக்க முடியாது என்பதும், களத்தில் வலுவான தலைமை இருந்தால் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் வெற்றி பெற முடியும் என்பதும் தெளிவாகியுள்ளது. அண்ணாமலை போன்ற ஒரு ஆளுமை இல்லாதது கட்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது. ‘லாயிக்கில்லாத தலைவர்கள்’ என்ற விமர்சனத்தை நயினாரும் தமிழிசையும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், எடப்பாடியாரின் ராஜதந்திரத்திற்கு முன்னால் பாஜக ஒரு அப்பாவிக் கட்சியாகவே இந்த முறை காட்சியளிக்கிறது. இந்த தோல்விப் பயம் தொண்டர்களிடையே ஒருவித குமுறலாக வெடித்துள்ளது, இது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
