தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில், அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை விவாகரத்து வழக்காக நீதிமன்ற படிக்கட்டுகளை மிதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் விமர்சகர் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் விஜய்க்கு எதிராக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பொதுவாக விவாகரத்து என்பது இரு நபர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயமாக இருந்தாலும், இந்த விவகாரம் தற்செயலாக நடந்த ஒன்றாக தெரியவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் பிம்பத்தை சிதைக்கத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு ‘அரசியல் சதி’யாகவே இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவின் நகல்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியாவதற்கு முன்பே ஆளும் கட்சியின் சமூக வலைதள குழுக்களிடம் சிக்கியது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது என பிஸ்மி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் ஆளும் திமுக மேலிடத்தின் தலையீடு இருப்பதாக அரசியல் விமர்சகர் பிஸ்மி கருதுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரி செல்வி, விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு மிக நெருக்கமானவர் மற்றும் அவரது ‘நலன் விரும்பி’யாக செயல்பட்டு வருகிறார். சங்கீதாவிற்கு சென்னையில் பெரிய நட்பு வட்டமோ அல்லது உறவினர்களோ இல்லாத சூழலில், அவர் செல்வியுடன் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இந்த நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, விஜய்யின் அரசியல் வளர்ச்சியை தடுக்க சங்கீதாவை ஒரு ‘பகடைக்காய்’ போல திமுக மேலிடம் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் பிஸ்மி முன்வைக்கிறார். விஜய்யின் குடும்ப விரிசலை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, அதன் மூலம் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.
இந்த விவாகரத்து மனுவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் மிகவும் கொடூரமானவை மற்றும் ஒருதலைப்பட்சமானவை என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விஜய்யை ஒரு ‘சைக்கோ’ போலவும், அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி தனி அறையில் அடைத்து வைத்தது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ள செய்திகள் முழுக்க முழுக்க மிகைப்படுத்தப்பட்டவை. பொதுவாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும்போது, வழக்கறிஞர்கள் அள்ளிப்போடும் ‘டெம்ப்ளேட்’ புகார்களே இவை என்பதும், உண்மைக்கு புறம்பானவை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது என பிஸ்மி கூறியுள்ளார். ஆனால், இதனை சன் நியூஸ் போன்ற ஊடகங்களும், தினகரன் போன்ற நாளிதழ்களும் முதல் பக்கத்தில் செய்திகளாக வெளியிட்டு விஜய்யை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி வருகின்றன. இத்தனை ஆண்டுகாலம் விஜய்யின் படங்களை வைத்து பல கோடி ரூபாய் லாபம் பார்த்த நிறுவனங்களே, இன்று அரசியல் காரணங்களுக்காக அவருக்கு எதிராக இத்தகைய கீழ்த்தரமான தாக்குதல்களை நடத்துவது ஊடக அறத்திற்கு எதிரானது என பிஸ்மி கூறியுள்ளார்.
குறிப்பாக, நடிகை திரிஷாவுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக கிளப்பப்படும் வதந்திகள் இந்த விவகாரத்தில் பெரும் தீயாக பரப்பப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டிலேயே விஜய் மற்றும் சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு குடும்ப தலைவராக விஜய் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி மௌனம் காத்து வந்தாலும், சில நடிகைகளின் சமூக வலைதள பதிவுகள் இந்த விவகாரத்தில் ‘நெருப்பில் ஊற்றிய எண்ணெயாக’ மாறிவிட்டன. விஜய்யும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில எல்லைகளை கவனமாக கையாண்டிருக்க வேண்டும் என்பதும், அத்தகைய கவனக்குறைவு அவரது அரசியல் எதிரிகளுக்கு ஒரு வலுவான ஆயுதத்தை கொடுத்துவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை என பிஸ்மி கூறியுள்ளார்..
இருப்பினும், விஜய்யை வீழ்த்த எடுக்கப்பட்ட இந்த முயற்சி அவருக்கு ஆதரவான ‘அனுதாப அலையாக’ மாறிவருவது ஆச்சரியத்தை அளிக்கிறது. பொதுவாக இத்தகைய புகார்கள் எழுந்தால் பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும், ஆனால் இந்த விஷயத்தில் வெளிநாடுகளில் உள்ள பெண் ரசிகர்கள் முதல் உள்ளூர் பொதுமக்கள் வரை பலரும் விஜய்க்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வருகின்றனர். “தேர்தல் நேரத்தில் சங்கீதா இப்படி செய்திருக்கக் கூடாது” என்றும், அவர் அரசியல் எதிரிகளுக்கு கருவியாக மாறிவிட்டார் என்றும் மக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே கரூர் சம்பவம் மற்றும் சில படங்கள் முடக்கப்பட்ட நிகழ்வுகள் எப்படி விஜய்க்கு ஆதரவாக முடிந்ததோ, அதேபோல் இந்த தனிப்பட்ட தாக்குதலும் அவருக்கு பெரும் மக்கள் ஆதரவை தேடித்தரும் வாய்ப்புள்ளது.
இறுதியாக, 2026 தேர்தல் களம் என்பது கொள்கை சார்ந்த விவாதங்களை விட, தனிமனித தாக்குதல்களை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு அரசியல் தலைவரை அவரது திட்டங்களுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் விமர்சிப்பதை விட்டுவிட்டு, அவரது படுக்கையறை வரை செல்வது கேவலமான அரசியல். இந்த இக்கட்டான சூழலில் விஜய் காக்கும் மௌனம் அவரது முதிர்ச்சியை காட்டுகிறது. எதிரிகள் சொந்த காசில் சூனியம் வைப்பது போல, விஜய்யை தனிப்பட்ட முறையில் சீண்டுவது அவர்களுக்கு தேர்தலை விடப் பெரிய தோல்வியையே பரிசாக அளிக்கும். இந்த சோதனைகளை கடந்து விஜய் எப்படித் தனது அரசியல் பயணத்தை தொடர போகிறார் என்பதை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
