பல ஆண்டுகளாக நம் வாழ்க்கையில் 5 நாட்கள், 40 மணி நேர வேலை என்ற நிலை தான் உள்ளது. ஆனால் பில் கேட்ஸ் கூறுவதை பார்க்கும்போது இந்த பழைய அமைப்பு விரைவில் மாறும் என தெரிகிறது.
உலகம் முழுவதும் தொழிற்துறை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் போன்ற பல துறைகளில் மனிதர்களுக்கு பதிலாக AI செயல்படும் என்றும், AI செயல்பாடுகள் உலக தரத்தில் இருக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். இதனால், வேலை என்பது என்றே புதிய அர்த்தம் பெறும் என்றும், இரண்டு அல்லது மூன்று நாள் வேலை என்பது சாதாரணமாய் மாறலாம் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், தொழில் துறைகளில் மாற்றம் ஏற்படுவதால் சமூகத்தில் பெரும் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று அவர் எச்சரிக்கிறார். சில பணிகள் மனிதர்களால் தொடர்ந்து செய்யப்படுவதை சமூக மற்றும் கலாச்சார காரணங்களுக்காக மக்கள் விரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேலை நாட்கள் குறைவதால், பல பணியாளர்களின் வாழ்க்கை எப்படி அமையும் என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.
அதுமட்டுமின்றி AI வளர்ச்சியால் வளம் சிலரிடம் மட்டுமே சுருங்கும் அபாயம் உள்ளது என்று ‘AI வின் தந்தை’ என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹின்டன் உள்ளிட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதை உணர்ந்த பில்கேட்ஸ், வரும் மாற்றங்கள் மக்கள் நலனை காக்கும் வகையில் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், AI யை யார் கட்டுப்படுத்த வேண்டும், யார் பயன்பெற வேண்டும், வளர்ச்சி மனித நலனுக்கு எதிராக செல்லாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்காக பல தரப்பிலிருந்தும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இரண்டு நாள் வேலை வாரம் ஒரு கனவு போல் இருந்தாலும், AI நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் பார்த்தால் அது விரைவில் நிஜமாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த எதிர்காலம் நமக்கு சுதந்திரம் தருமா அல்லது அச்சமா? என்பதை காலம்தான் நிர்ணயிக்கும். ஆனால் ஒரு விஷயம் உறுதி, நாளைய வேலைகள் இன்றையதை போல இருக்காது என்பது மட்டும் உண்மையாக போகிறது.