பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இளம் பெண், தற்போது கூகுளில் வேலைக்கு சேர்ந்துள்ளதாகவும், அவருக்கு வருடத்திற்கு ரூ. 60 லட்சம் சம்பளம் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அலங்க்ரிதா சக்சி. அவர் தனது பள்ளிப் படிப்பை சொந்த கிராமத்திலேயே முடித்தார். அதன் பின்னர், மேல்நிலைப் பள்ளி படிப்பை அருகிலுள்ள நகரத்தில் பயின்றார். இதனையடுத்து, அவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மின், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பிடெக் பட்டம் பெற்றார்.
அவர் படிப்பில் மிகச் சிறந்த மாணவியாக விளங்கினார். அவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது; அவரது தந்தை கூலித் தொழிலாளியாக வேலை செய்தார், மற்றும் அவரது தாய் தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியையாக பணியாற்றினார்.
படிப்பை முடித்த பிறகு, விப்ரோ நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக 2019 முதல் 2021 வரை இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, குளோபல் கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் செக்யூரிட்டி அனலிஸ்ட் பதவியில் பணியாற்றினார். இதையடுத்து, ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, அவருக்கு கூகுளில் செக்யூரிட்டி அனலிஸ்ட் பதவியில் வேலை கிடைத்துள்ளது. அவருக்கு வருடத்திற்கு ரூ. 60 லட்சம் சம்பள பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவர் தனது லிங்க்ட்இன் பதிவில்: “கூகுளில் செக்யூரிட்டி அனலிஸ்ட் பணியில் சேர்ந்துவிட்டேன் என்பதை அறிவிக்க மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்புக்காக மிகுந்த நன்றிகள். புதுமை மற்றும் ஆற்றலான மக்களுடன் பணியாற்றுவதற்கு நான் ஆர்வமாக உள்ளேன். என் பயணத்தில் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த என் பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல் விலையில்லாத ஒன்றாக உள்ளது. புதிய தொடக்கங்களுக்கும் எதிர்கால பயணத்திற்கும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தாலும், சரியான கல்வி, விடாமுயற்சி, திறமை ஆகியவை இருந்தால் மிகப்பெரிய உயரத்துக்குச் செல்லலாம் என்பதற்கு அலங்க்ரிதா சக்சி ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளார் என்று பலர் பாராட்டி வருகின்றனர்.