பீகார் மாநிலம் என்றாலே பலருக்கும் அரசியல் குழப்பம், ஏழ்மை, கல்வியறிவு குறைவான மக்கள் ஆகியவையே முதலில் நினைவுக்கு வரும். ஆனால், நீங்கள் நம்புவீர்களா? பீகாரில் தயாரிக்கப்படும் காலணிகளை ரஷ்ய இராணுவ வீரர்கள் பயன்படுத்துகிறார்கள்!
ஆமாம், பீகாரில் காலணி தொழிற்சாலை மிக விரைவாக வளர்ந்து வருகின்றது. இந்திய ராணுவத்திற்காக ஏற்கனவே போர்க்கால காலணிகளை தயாரித்து வரும் இந்த மாநிலம், தற்போது உலக அளவிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும், உக்ரைன் நாட்டுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யா, தனது ராணுவத்திற்காக பீகாரில் தயாரிக்கப்படும் காலணிகளை இறக்குமதி செய்துள்ளது.
ரஷ்ய ராணுவ வீரர்கள் கடுமையான பனிகளுக்கு, போர்க்களப் பயணங்களுக்கு பயன்படுத்தும் காலணிகளில் பெரும்பாலானவை பீகாரிலேயே தயாரிக்கப்பட்டவை. இந்த காலணிகள் நீர்ப்புகா தன்மை கொண்டவை, கடும் பருவநிலைக்கும் எதிர்க்கும் திறன் கொண்டவை, மேலும் அதிக உறுதிப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டவை. இதனால், போர்க்களங்களில் போராடும் வீரர்களுக்கு இது மிகவும் உகந்ததாக இருக்கிறது.
இப்போது, ரஷ்யாவையே தாண்டி 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பீகாரில் தயாரிக்கப்பட்ட காலணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழில் வளர்ச்சியில் பிற மாநிலங்களை விட பின்தங்கியதாக கருதப்பட்ட பீகார், இன்று உலகளவில் முக்கியமான ஏற்றுமதி மையமாக மாறியுள்ளது என்பது பலருக்கும் ஆச்சரியமான செய்தி!