இந்தியா முழுவதும் 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மூலம் விதவிதமான முறைகளில் மோசடிகள் நடப்பது தொடர்கதை ஆகி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த மோசடி காரணமாக 17 ஆயிரம் கோடி பணம் ஆன்லைன் மூலம் கொள்ளை போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து ஆன்லைன் மூலம் மோசடி செய்த 4.5 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. முதல் கட்ட விசாரணையில் கொள்ளையடித்த பணத்தை சம்பந்தமில்லாத நபர்களின் பெயர்களில் வங்கி கணக்குகளை தொடங்கி, அதன் மூலம் தான் பண பரிமாற்றம் நடப்பதை சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த மோசடி வங்கி கணக்குகள் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் சில தனியார் வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வங்கி கணக்கு தொடங்குவதற்கு மிகவும் எளிய முறை, ஆன்லைன் மூலமே வங்கி கணக்குகள் தொடங்கி கொள்வது ஆகிய வசதிகளால் தான் மோசடிக்காரர்கள் அதிகரித்து வருகிறது என்றும், எனவே புதிதாக வங்கி கணக்கு தொடங்க கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மோசடிகள் வங்கி பரிவர்த்தனை மூலமே நடைபெறுவதால், வங்கிகள் நினைத்தால் இந்த மோசடியை முழு அளவில் தடுக்க முடியும் என்றும். , நிதி அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்பு அமைச்சகம், காவல்துறை ஆகிய நான்கு துறைகளும் இணைந்து பணிபுரிந்தால் மோசடிகளை முழுமையாக நிறுத்தி விடலாம் என்றும் கூறப்படுகிறது.
வங்கி கணக்கு முடக்கம் என்பது ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கை தான் என்றும், இனியும் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பணம் ஒரு ரூபாய் கூட மோசடிக்கு உள்ளாகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஓடிபி போன்றவற்றை தெரியாத நபர்களிடம் பகிரக்கூடாது என்று வங்கிகள் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருப்பதும் துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.