மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குவைத்தில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த அமெரிக்க விமானி ஒருவரை, உள்ளூர் நபர் ஒருவர் இரும்பு தடியுடன் மிரட்டிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குவைத் வான்பரப்பில் திங்கள்கிழமை அன்று மூன்று அமெரிக்க போர் விமானங்கள் தவறுதலான துப்பாக்கி சூட்டில் சிக்கி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு விமானத்தில் இருந்து குதித்த விமானியை சூழ்ந்த உள்ளூர்வாசிகள், அவர் ஈரானியர் என்று தவறாக கருதி ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர். ஒரு நபர் அவரை நோக்கி இரும்பு தடியை ஓங்கியபடி நெருங்கியபோது, அந்த விமானி பின்வாங்குங்கள், நில்லுங்கள் என்று பதற்றத்துடன் கத்துவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தான் ஒரு அமெரிக்கர் என்பதை அந்த விமானி உறுதிப்படுத்திய பின்னரே, அங்கிருந்தவர்கள் அமைதியாகி அவரை விட்டு சென்றனர். சுமார் 90 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த அதிநவீன போர் விமானங்கள் வானில் இருந்து சுழன்று கீழே விழுந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகி உலகையே அதிர வைத்தன. இந்த விபத்தில் சிக்கிய ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. குவைத் பாதுகாப்பு அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

அதே நேரத்தில், மற்றொரு பெண் விமானி குவைத் மக்களால் அன்புடன் வரவேற்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் உலா வருகிறது. வான் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த அந்த பெண் விமானி, எவ்வித காயமுமின்றி புன்னகையுடன் காணப்பட்டார். அவருக்கு உதவிய உள்ளூர்வாசிகள் “நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்” என்று கூறி ஆறுதல் படுத்தினர். இந்த முரண்பட்ட இரண்டு சம்பவங்களும் போர்ச்சூழலில் நிலவும் பதற்றத்தையும், குழப்பத்தையும் ஒருசேர பிரதிபலிக்கின்றன. பென்டகன் தகவலின்படி, ஈரானுடனான இந்த மோதலில் இதுவரை நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பேட்டியில், ஈரானுடனான இந்தப் போர் சுமார் நான்கு வாரங்கள் அல்லது அதற்கும் குறைவாக நீடிக்கக்கூடும் என்று கணித்துள்ளார். ஈரான் ஒரு பெரிய நாடு என்பதால் அதை சிதைக்க இவ்வளவு காலம் தேவைப்படும் என்றும், ஆனால் அமெரிக்காவிற்கு இதைவிட நீண்ட காலம் போரிடும் திறன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வார இறுதியில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஒரு கட்டுப்பாடற்ற போர்க்களமாக மாறியுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள 15 நாடுகளை சேர்ந்த அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்துள்ளனர். ஈரானின் தெஹ்ரானில் உள்ள மொதஹாரி மருத்துவமனையின் அருகிலும் குண்டுகள் வெடித்ததில் அந்த மருத்துவமனை பலத்த சேதமடைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, ஈரானில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட நகரங்கள் தாக்கப்பட்டுள்ளன; சுமார் 555 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 11 பேரும், லெபனானில் 31 பேரும் இந்தப் போருக்குப் பலியாகியுள்ளனர். முறையான வெளியேறும் திட்டம் ஏதுமின்றி தொடரும் இந்த மோதல், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை முடக்கி, சர்வதேசப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். வல்லரசு நாடுகளின் இந்த மோதல் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரு முடிவில்லாத துயரத்திற்குள் தள்ளியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
