வெறும் ரூ.21 தான் கட்டணம்.. ஆனால் லாபம் மட்டும் ரூ. 2043 கோடி.. ’அந்நியன்’ பட கணக்கு..!

  ஏடிஎம் வைத்திருக்கும் வங்கிகள், தங்களது வங்கியின் ஏடிஎம்களில் அல்லாமல், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால், வெறும் 21 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இந்த…

லட்சம்

 

ஏடிஎம் வைத்திருக்கும் வங்கிகள், தங்களது வங்கியின் ஏடிஎம்களில் அல்லாமல், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால், வெறும் 21 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இந்த கட்டணம் சிறுகச் சிறுக உயர்ந்து, 2048 கோடி ரூபாய் லாபம் அடையும் அளவுக்கு ஒரு வங்கி லாபம் பார்த்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

ஆனால் அதுதான் உண்மை! அந்த வங்கி பாரத ஸ்டேட் வங்கிதான், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏடிஎம் பரிவர்த்தனைகள் மூலம் மட்டும் 2043 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

வங்கிகளை பொறுத்தவரை, தங்களுடைய வங்கியின் ஏடிஎம்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். அதேபோல், பிற வங்கிகளின் ஏடிஎம்களில், மெட்ரோ நகரங்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகள் மற்றும் மெட்ரோ அல்லாத பகுதிகளில் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். இந்த இலவச வரம்பை கடந்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த கட்டணங்கள் மூலம் தான் ஸ்டேட் வங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2043 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி 90 கோடி ரூபாய், கனரா வங்கி 31 கோடி ரூபாய் ஏடிஎம் மூலம் லாபம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மே 1ம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் மீண்டும் அதிகரிக்கவுள்ளது. ஏடிஎம் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்ய, இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, மே 1ம் தேதி முதல் இலவச வரம்பை மீறி கூடுதலாக ஏடிஎம் பயன்படுத்தினால், ஒரு பரிவர்த்தனைக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படத்தில் ஒரு வசனத்தை சுஜாதா எழுதியிருப்பார். அந்த வசனம் இதோ:

அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது…’’
“அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ… பெரிய தப்புங்க…

இது போலத்தான் இந்த ஏடிஎம் கணக்குகளும் உள்ளன என்று நெட்டுசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.