அஜர்பைஜானுடனான எல்லை பதற்றம் நீடித்துவரும் சூழலில், இந்திய அரசின் தேஜாஸ் போர் விமானங்களை கையகப்படுத்த ஆர்மேனியா (Armenia) ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான மிகப்பெரிய தற்காப்பு ஒப்பந்தமாக அமையலாம் என கருதப்படுகிறது.
இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த தேஜாஸ் மார்க் 1ஏ (Tejas Mark 1A) இலகுரக போர் விமானங்களை ஆர்மேனியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. எகிப்து, அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தேஜாஸ் விமானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிய நிலையில், ஆர்மேனியாவின் சமீபத்திய விருப்பம் இந்த போர் விமானத்தின் உலகளாவிய தரம் மற்றும் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது.
ஆர்மேனியா பெரும்பாலும் சோவியத் காலத்து மிக்-29 (MiG-29) ரகப் போர் விமானங்களையே நம்பியுள்ளது. எனினும், அதன் அண்டை நாடான அஜர்பைஜான், துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்தி, புதிய போர் விமானங்களை வாங்கி வருவதால், ஆர்மேனியாவிற்கு சக்திவாய்ந்த புதிய போர் விமானங்கள் தேவைப்படுகின்றன.
நீண்டகாலமாக பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்யாவை நம்பியிருந்த ஆர்மேனியா, நாட்டை வலுப்படுத்த இப்போது மேற்கத்திய மற்றும் பிற கூட்டாளிகளை நோக்கி திரும்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவுடனான ஆர்மேனியாவின் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன:
2022-ஆம் ஆண்டில், இந்தியாவிடமிருந்து ‘பினாகா’ (Pinaka) பல்குழல் ராக்கெட் ஏவுதளங்களை வாங்க ஆர்மேனியா ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தற்போது, வான் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தியாவின் ‘ஆகாஷ்’ (Akash) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைக் கையகப்படுத்தவும் ஆர்மேனியா பரிசீலித்து வருகிறது.
தேஜாஸ் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், அது இந்தியா-ஆர்மேனியா தற்காப்பு கூட்டாண்மையில் ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், அஜர்பைஜான் மற்றும் துருக்கியின் கூட்டு அச்சுறுத்தலை சமாளிக்க ஆர்மேனியாவுக்கு இது ஒரு பெரிய சக்தியாக அமையும் என நம்பப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
