வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய போறீங்களா.. ஜூலை 31 கடைசி நாள்.. என்ன செய்ய வேண்டும்

டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கு என்பது தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். யாரெல்லாம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். செய்ய தேவையில்லை.. என்ன செய்தால் வரி சேமிப்பு பெறலாம் என்பதை பார்ப்போம்.

நீங்கள் தனிநபர் என்றால் உங்களுடைய மொத்த வருமானத்தின் அடிப்படையில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யுங்கள். அதேநேரம் நீங்கள் மாதசம்பளம் வாங்கும் ஊரியர் என்றால் உங்கள் நிறுவனமே வருமான வரியை பிடித்திருக்கும். எனவே கணக்கு தாக்கல் செய்ய உங்கள் நிறுவனத்தின் ஹெச்ஆர்களே உங்களுக்கு உதவுவார்கள். அதேநேரம் உரிய முறையில் சேமிப்பில் முதலீடுகள் செய்திருந்தால் உங்களுக்கு பிடிக்ப்பட்ட தொகையில் ஓரளவு தொகை திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வருமானம் என்பது சம்பளம் / பென்ஷன், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி, டிவிடெண்ட் வருமானம், மூலதன ஆதாயம் எல்லாம் சேர்ந்தது. இந்த அடிப்படையில் வருமானம் என்பது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர் கட்டாயம் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.. இதுவே 60 வயதுக்கு மேல் 80 வயதுக்குள் இருந்தால், ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேல் என்றால் ரூ.5 லட்சமாகவும் இந்த விகிதம் உள்ளது. இந்த வருமான வரம்புக்குள் இருப்பவர் கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்வது கட்டாய மில்லையாகும்

 

அதேநேரம் உங்களுடைய பான் எண் அடிப்படையில் டி.டி.எஸ் (Tax Deducted at Source). மற்றும் டி.சி.எஸ் (Tax Collected at Source) வரிகள் நிதியாண்டில் ரூ.25,000-க்கு மேல் பிடித்திருந்தால், உங்கள் வருமானம் எதுவாக இருந்தாலும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இது 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 ஆகும்.

அதேபோல் நிதியாண்டில் ரூ.1 லட்சத்துக்குமேல் உங்கள் மின்சாரக் கட்டணம் வந்திருந்தால் கட்டாயம் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் நிதியாண்டில் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், வரிக் கணக்கு கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டுச் சுற்றுலாவுக்காக ரூ.2 லட்சத்துக்குமேல் செலவு செய்திருந்தால் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

புதிய வரி முறை,  Default ஆக எல்லாருக்குமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழைய வரி முறையில் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனில், அதை  நீங்கள் தனியாக தேர்வு செய்ய வேண்டும். வரிச் சலுகைகள் ரூ.1.5 லட்சத்துக்குக் கீழ் இருந்தால், புதிய வரி முறை உங்களுக்கு லாபகரமாக இருக்கும்,

அதே நேரத்தில், வரிச் சலுகைகள் ரூ.3.75 லட்சத்துக்கு மேல் வேண்டும் என்றால் பழைய வரி முறை தான் உங்களுக்கு லாபம் இருக்கும். அதற்கு வீட்டு வாடகை, தபால் சேமிப்பு, மருத்துவ காப்பீடு, செல்வ மகள் சேமிப்பு, எல்ஐசி, கல்வி கட்டணம் உள்பட பல்வேறு ஆவணங்கள் இருக்க வேண்டும். சரியான முறையில் முதலீடு செய்தால் 10 லட்சம் வரை தாராளமாக வரி சேமிக்க முடியும்.

அதேபோல பழைய வரி முறையில் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் 87ஏ பிரிவின் கீழ் ரூ.12.500 வரித் தள்ளுபடி அளிக்கப் படுகிறது. இதுவே, புதிய வரி முறையில் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.7 லட்சத்துக்குள் இருந்தால், 87ஏ பிரிவின்கீழ் ரூ.25,000 வரித் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்ல் செய்ய படிவம் 16ஐ உங்கள் நிறுவனங்களில் வாங்குங்கள். அவர்களே உங்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவுவார்கள். அத்துடன் வரி சேமிப்புக்கும் உதவுவார்கள்.

ஜூலை 31ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வில்லை எனில், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுவே ரூ.5 லட்சத்துக்குமேல் எனில், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், வருமானத்தை மறைத்துக் குறைவாகக் கட்டினாலும் உங்களுக்கு வருமான வரித்துறை அபராதம் விதிக்கும். அதிகபட்சமாக அபராதத்துடன் 3 முதல் 24 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அபராதத்துடன் டிசம்பர் 31-ம் தேதி வரைக்கும் தாமத மாக வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அதன் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது.