உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் ஓலா நிறுவனம் சொந்தமாக மேப்ஸ் வடிவமைத்தது என்றும் ஓலா நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த மேப்பை தான் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆப்பிள் நிறுவனமும் புதிய மேப் அறிமுகம் செய்துள்ளது. தற்போது பீட்டா வெர்ஷன் வெளியாகியுள்ளதாகவும் விரைவில் ஒரிஜினல் வெர்ஷன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் மேப் போலவே டிரைவிங் உட்பட பல்வேறு வசதிகள் இந்த ஆப்பிள் மேப்ஸில் இருக்கும் நிலையில் கூகுள் மேப்ஸ்க்கு நேரடி சவாலை ஆப்பிள் மேப்ஸ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த மேப்ஸை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இதுவரை வேறொரு நிறுவனத்தின் செயலி மூலம் ஆப்பிள் மேப்ஸை பயன்படுத்த வேண்டிய நிலையில் தற்போது பிரவுசரிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
beta.maps.apple.com என்ற இணையதளத்தில் ஆப்பிள் மேப்ஸை பயன்படுத்தலாம் என்றும் இந்த மேப் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கூகுள் மேப்ஸில் இருக்கும் வசதிகளை விட கூடுதலான வசதிகள் விரைவில் இதில் அறிமுகம் செய்யப்படும் என்றும் பீட்டா வெர்ஷன் என்பதால் பயன்பாடு சார்ந்த சில சிக்கல்கள் இருக்கிறது என்றும் இந்த பீட்டா வெர்ஷனில் உள்ள குறைகளை அறிந்து அதன் பின் ஒரிஜினல் வெர்ஷன் வெளியாகும் போது வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக மேப்ஸ் துறையில் கூகுள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் அதிரடியாக களமிறங்கியதை எடுத்து இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.