தமிழகத்தில் எந்த புதிய கட்சியும் முதலில் தனித்து தான் போட்டியிடும்.. பின்னர் தோல்விக்கு பின் மனம் மாறி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்.. விஜயகாந்த், கமல்ஹாசன் இதை தான் செய்தார்கள்.. அதற்கு முதலிலேயே கூட்டணி வைத்து தோல்வியை தவிர்க்கலாமே? விஜய்க்கு ஆலோசனை கூறிய அரசியல் பிரபலம்.. விஜய்யும் ஓகே சொன்னாரா?

தமிழக அரசியல் களத்தில் அண்மையில் புதிதாக பிரவேசித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பாதை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஒரு மூத்த அரசியல் பிரபலம் அவருக்கு மிகவும் முக்கியமானதொரு…

vijay2

தமிழக அரசியல் களத்தில் அண்மையில் புதிதாக பிரவேசித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பாதை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஒரு மூத்த அரசியல் பிரபலம் அவருக்கு மிகவும் முக்கியமானதொரு ஆலோசனையை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“புதிய கட்சிகள் தனித்து போட்டியிட்டு, தோல்வியை தழுவிய பின் கூட்டணிக்கு செல்வதைவிட, முதலிலேயே சரியான கூட்டணியில் இணைந்து அதிகாரத்தை கைப்பற்றுவதே புத்திசாலித்தனம்” என்பதே அந்த ஆலோசனை.

தமிழகத்தில் புதிய கட்சிகளை தொடங்கிய சினிமா பிரபலங்கள் எடுத்த ஆரம்பக்கட்ட முடிவுகளை அரசியல் வரலாற்று கண்ணோட்டத்துடன் இந்த ஆலோசனை ஒப்பிட்டு பார்த்துள்ளது.

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். பின்னர், 2011-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பின்னரே, தே.மு.தி.க. பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு உயர்ந்து, தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக மாறியது. தனித்து இயங்கிய காலம், அவரது ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. 2006ஆம் ஆண்டே விஜயகாந்த் திராவிட கட்சிகளில் ஒன்றில் கூட்டணி வைத்திருந்தால் அதிகாரத்தில் இருந்திருப்பார் அல்லது எதிர்க்கட்சி தலைவராக இருந்திருப்பார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து தனித்து போட்டியிடுவதையே இலக்காக கொண்டது. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல், பெரும் தோல்வியை சந்தித்தது. இதன் விளைவாக, கட்சிக்குள் சோர்வும், அமைப்பு பலவீனமும் ஏற்பட்டது. அதன்பின் திமுகவுடன் கூட்டணி வைத்த கமல்ஹாசன், தற்போது ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். இதை அவர் 2019ல் செய்திருந்தால் அப்பவே ராஜ்யசபா எம்பி ஆகியிருக்கலாம்.

இந்த வரலாற்றை சுட்டிக்காட்டிய அந்த அரசியல் பிரபலம், “தமிழகத்தில் எந்த புதிய கட்சி வந்தாலும், முதலில் தனித்து போட்டியிட்டு, பின் தோல்வி கண்ட பிறகே திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறது. இதனால், கட்சியின் வளங்களும் நேரமும் வீணாகிறது; ஆரம்பத்திலேயே ஒரு பலவீனமான பிம்பம் உருவாகிறது” என்று விஜய்க்கு எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் ஜெயிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்துதான் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை நிறுத்திவிட்டார்.

சினிமா செல்வாக்குடன் வலுவான ஒரு கூட்டணியை அமைப்பதன் மூலம், முதல் தேர்தலிலேயே கணிசமான எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை பெற முடியும்.

கூட்டணி என்று வைத்துவிட்டால் நீங்கள் தனியாக போராட வேண்டியதில்லை. எந்த பிரச்சனை என்றாலும் கூட்டணி கட்சியினர் கைகொடுப்பார்கள், அதிலும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி என்றால் பிரச்சனை செய்யவே அச்சப்படுவார்கள். எனவே முதலில் கூட்டணி வைத்து அதிகாரத்தை கைப்பற்றுங்கள், பின் மக்கள் உங்களுக்கு முழுமையான ஆட்சியைத் தருவார்கள்” என்ற ஒரு பிராக்டிக்கல் அரசியல் பார்வையை அந்தப் பிரபலம் விஜய்க்கு வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனையை கேட்ட விஜய், இந்த கருத்தை மிகவும் ஆழமாக பரிசீலிப்பதாகவும், இதுவே தனது இலக்கை விரைந்து அடைய சரியான வழிமுறையாக இருக்கக்கூடும் என்றும் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இந்த முடிவின் மூலம், விஜய் உடனடியாக முதல்வர் வேட்பாளராக வர நினைப்பதைவிட, 2031-ல் முதல்வர் நாற்காலியில் அமர்வதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் முடிவாக உள்ளது