சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடப்பு 2024-ம் ஆண்டில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்துள்ளது.
அந்தவகையில் இந்திய சந்தையில் இந்த ஆண்டு 30 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த காலண்டர் ஆண்டாக இந்த ஆண்டு மாறும் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதே இந்த ஆண்டு தங்கம் விலை இந்த அளவு அதிகரித்ததற்கு காரணம் என அந்த கவுன்சில் மேலும் தெரிவித்து உள்ளது.
நடப்பு காலண்டர் ஆண்டின் 3-வது காலாண்டில் 694 டன் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கியுள்ளன. இதில் துருக்கியும், போலந்தும் முன்னணியில் உள்ளன. அந்த இரு நாடுகளும் கடந்த அக்டோபர் வரை முறையே 72 டன், 69 டன் என தங்கத்தை வாங்கி குவித்து உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியும் அக்டோபரில் 27 டன் தங்கத்தை தனது இருப்பில் சேர்த்து இருக்கிறது.
தங்கத்தின் விலை இந்த ஆண்டு ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், அடுத்த ஆண்டு இப்படி இக்காது என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. அடுத்த ஆண்டு (2025) தங்கத்துக்கு சவாலான ஆண்டாக இருக்கும் என பல்வேறு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சிக்கல்கள் குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பும், அதனால் சர்வதேச பொருளாதாரம் மற்றும் சந்தைகளில் ஏற்படும் தாக்கங்களும் முக்கிய காரணமாக தெரிவித்து உள்ளனர்.