தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி ஒரு மும்முனை போட்டியாக உருமாறி வருகிறது. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடைய வாக்குகளை பிரிக்கும் என்பதுதான் தற்போது டெல்லி வரை எதிரொலிக்கும் விவாதம். அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, விஜய் பிரிக்கப்போவது அமித்ஷா தலைமையிலான பாஜக கூட்டணிக்கு சொந்தமில்லாத வாக்குகளைத்தான். குறிப்பாக, திமுகவின் கோட்டையாக கருதப்படும் சிறுபான்மையினர் வாக்குகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகளில் விஜய் கணிசமான ஓட்டையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மறைமுகமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் என்பது அமித்ஷாவின் கணக்காக பார்க்கப்படுகிறது.
பாஜகவிற்கு தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய சவால் திமுகவின் வலுவான வாக்கு வங்கிதான். ஆனால், விஜய் தற்போது முன்வைக்கும் சித்தாந்தம் மற்றும் அவரது பிம்பம் ஆகியவை திமுகவின் பாரம்பரிய வாக்குகளை ஈர்க்கும் வல்லமை கொண்டது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் அதீத செல்வாக்கு, திமுகவின் ‘யுத்’ விங் வாக்குகளை தன் பக்கம் இழுக்கும். அதேபோல், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியைத் தேடும் பெண்கள் வாக்கு வங்கியிலும் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். இந்த வாக்குகள் அனைத்தும் திமுகவிடம் இருந்து பிரியும்போது, அது ஆளுங்கட்சியின் வெற்றி வாய்ப்பை கணிசமாக குறைக்கும்.
இருப்பினும், அமித்ஷாவின் இந்த மெகா கணக்கில் ஒரு முக்கியமான நிபந்தனை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதாவது, விஜய் தனது கூட்டணியில் காங்கிரஸை சேர்க்கக்கூடாது என்பதே அது. ஒருவேளை விஜய் காங்கிரஸுடன் கைகோர்த்தால், அது மீண்டும் ஒரு வலுவான ‘மதச்சார்பற்ற’ கூட்டணியாக மாறி, பாஜகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். ஆட்சியையே பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, விஜய் தனித்து போட்டியிடுவது அல்லது காங்கிரஸை தவிர்த்த மாற்று அணியை உருவாக்குவதுதான் பாஜகவின் நீண்டகால வியூகத்திற்கு உதவும். இதன் மூலம் திமுகவின் பலத்தை குறைத்து, பாஜக ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக அல்லது தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க முடியும்.
சிறுபான்மையினர் வாக்குகள் பொதுவாக திமுகவை நோக்கி செல்லும் நிலையில், விஜய்யின் வருகை அதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கட்சி மதச்சார்பற்ற கொள்கையை வலியுறுத்துவதால், சிறுபான்மையினரின் ஒரு பகுதி வாக்குகள் குறிப்பாக தலித் மற்றும் கிறிஸ்துவ வாக்குகள் விஜய்க்கு மாற வாய்ப்புள்ளது. இது திமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் ‘கோர்’ வாக்குகளை பலவீனப்படுத்தும். அமித்ஷா தனது தேர்தல் வியூகங்களில் எப்போதும் எதிர் அணியின் வாக்குகளை பிரிப்பதில் வல்லவர் என்பதால், விஜய்யின் எழுச்சியை அவர் ஒரு வாய்ப்பாகவே கருதுவதாக கூறப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் கூறுவது போல, “விஜய் ஒரு துருப்புச்சீட்டு”. அவர் வாங்கும் ஒவ்வொரு வாக்கும் திமுகவின் அதிகாரத்தை குறைப்பதற்கான ஒரு வழியாகவே தேசிய அரசியல் தலைவர்களால் பார்க்கப்படுகிறது.
இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகள் அமித்ஷாவின் கணக்குப்படி அமையுமா அல்லது விஜய் ஒரு தனித்துவமான ஆட்சியை அமைப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். கூட்டணி மாற்றங்களும், திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் தேர்தல் நெருங்கும்போது இன்னும் சூடுபிடிக்கும். விஜய் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, காங்கிரஸை தவிர்த்து ஒரு புதிய பாதையில் பயணித்தால், அது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் சவால்களை தாண்டி, அமித்ஷாவின் வியூகங்களுக்கு விஜய் எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதே இனி வரும் நாட்களின் எதிர்பார்ப்பு.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
