இந்தியாவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய விற்பனை கிட்டத்தட்ட சுமார் ரூ.75,000 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் இருந்த $8 பில்லியன் விற்பனையை விட 13% அதிகம். இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு, இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் போன்ற அதன் முன்னணி தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்தது முக்கியக் காரணமாகும்.
இந்திய நுகர்வோர்களிடையே, குறிப்பாக நடுத்தர வகுப்பினரிடம், ஐபோன் ஒரு அடையாள சின்னமாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஐபோன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஐபோனுடன் சேர்ந்து, மேக்புக் கணினிகளுக்கான தேவையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சில்லறை வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பெங்களூரு மற்றும் புனேவில் புதிய அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களை திறந்துள்ளது.
ஆப்பிள் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் ஐந்து புதிய உற்பத்தி மையங்களை அமைக்கவுள்ளது. இந்த நகர்வு, சீனாவை சார்ந்து இருப்பதை குறைத்து, உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்துடன் உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையை கருத்தில்கொண்டு, ஆப்பிள் நிறுவனம் இங்கு அதிக முதலீடு செய்து வருகிறது.
இந்தியாவில் சாம்சங், சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டி இருந்தபோதிலும், ஆப்பிள் 7% சந்தை பங்கைப் பிடித்துள்ளது. வருங்காலங்களில் இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் அவரது பேச்சை பொருட்படுத்தாமல், இந்தியாவில் தனது முதலீடுகளை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் முதலீடு செய்வதை விட மற்ற நாடுகளில் முதலீடு செய்வதை விட இந்தியாவில் உற்பத்தி செய்வதுதான் சிறந்தது என்று ஆப்பிள் நிறுவனம் நம்புவதே இதற்கு முக்கிய காரணம். இது இந்தியாவின் உற்பத்தி துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும்.
அமெரிக்கா 50% வரி விதித்த போதிலும், இந்தியாவிற்கு முதலீடுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இது பிரதமர் மோடியின் மிகப்பெரிய வெற்றியாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிலை, இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கு சாதகமாக உள்ளது. மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
