அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்போதைய போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்த தீர்மானம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு ‘பரஸ்பர’ முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய குடியரசு தற்போதைய ராணுவ தலையீட்டிற்கு முன்னதாக இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்கவிருந்தது என்று குற்றம் சாட்டிய டிரம்ப், “நாங்கள் இருவரும் இணைந்து இஸ்ரேலை அழிக்க நினைத்த ஒரு நாட்டை அழித்துள்ளோம்” என்று அதிரடியாக கூறியுள்ளார். ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ இதழுக்கு அளித்த பேட்டியில், போரை நிறுத்தும் அதிகாரம் வாஷிங்டனிடம் மட்டும் உள்ளதா என்ற கேள்விக்கு, இது இரு நாடுகளும் ஆலோசித்து எடுக்கும் முடிவு என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்கா ஒருவேளை தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேல் தனித்து போரை தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அத்தகைய சூழல் தேவைப்படாது என்று நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளை மாளிகை இந்த போர் நான்கு முதல் ஆறு வாரங்கள் நீடிக்கலாம் என்று கணித்திருந்தாலும், டிரம்ப் எந்த ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதிக்க மறுத்துவிட்டார். பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உயரிய தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியான ஒருங்கிணைப்பு மிகவும் ஆழமாக இருப்பதை இவரது கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஈரானின் புதிய தலைவராக அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பற்றிய விரிவான கருத்துக்களை டிரம்ப் தவிர்க்க விரும்பினார். இருப்பினும், வெள்ளை மாளிகையின் அனுமதி இல்லாமல் புதிய ஈரானிய தலைமை நீண்ட காலம் நீடிக்காது என்று ஏற்கனவே எச்சரித்திருந்த டிரம்ப், தற்போதைய சூழலில் “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று மட்டும் கூறினார். போர்க்களத்தை தாண்டி, இஸ்ரேலிய உள்நாட்டு அரசியலிலும் தலையிட்ட டிரம்ப், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நெதன்யாகுவிற்கு உடனடி மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
நெதன்யாகு மீதான லஞ்ச ஊழல் வழக்குகளை ‘வேடிக்கையானது’ என்று வர்ணித்த டிரம்ப், நெதன்யாகு நீதிமன்ற வழக்குகளில் கவனம் செலுத்துவதை விட போரில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அதிபர் ஹெர்சாக் நெதன்யாகுவிற்கு மன்னிப்பு வழங்க மறுப்பது ‘மிகவும் தவறான காரியம்’ என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஹெர்சாக் அலுவலகம், இஸ்ரேல் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், மன்னிப்பு கோரிக்கை சட்ட ரீதியான நடைமுறைகளின் படியே பரிசீலிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எட்டு நாட்களாக நீடிக்கும் இந்த போர் ஒரு பிராந்திய பேரழிவைத் தடுத்துள்ளதாக டிரம்ப் மீண்டும் நியாயப்படுத்தியுள்ளார். நெதன்யாகு இல்லையென்றால் இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என்று புகழாரம் சூட்டிய அவர், ஈரானின் பலவீனம் அந்த பிராந்தியத்தில் உள்ள ஹமாஸ் போன்ற ஆயுத குழுக்களையும் ஆயுதங்களை கைவிட செய்யும் என்று கணித்துள்ளார். ஈரானின் நிலைமை முன்பை விட மிக மோசமாக இருப்பதாகவும், அது இன்னும் மோசமடையும் என்றும் அவர் எச்சரித்தார்.
இறுதியாக, இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக்கிற்கு மீண்டும் ஒருமுறை தனது கோரிக்கையை வலியுறுத்திய டிரம்ப், நெதன்யாகுவிற்கு இப்போதே பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஆணித்தரமாக கூறினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் அணுஆயுத மற்றும் ஏவுகணை தளங்களை சிதைத்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த போர் ஒரு புதிய மத்திய கிழக்கை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
