அமெரிக்கா விசா பெற நேர்காணலுக்கு சென்ற இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலி அமெரிக்காவில் இருக்கிறார் என்று உண்மையை கூற, அடுத்த சில வினாடிகளில் அவரது விசா நிராகரிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க விசா கிடைப்பது தற்போது சிக்கலாக இருக்கிறது என்றும், குறிப்பாக அமெரிக்க குடியுரிமை உள்ளவர்களை திருமணம் செய்து கொண்டு குடியுரிமை பெற்று அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் பலர் விசா கேட்டு வருவதாகவும், அதனால் விசா கெடுபிடிகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரெடிட் சமூக வலைத்தளத்தில் ஒரு இளைஞர் தனது அமெரிக்க விசா நேர்காணல் குறித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். நேர்காணலின் போது தன்னிடம் மூன்று கேள்விகள் கேட்டதாகவும், அந்த மூன்று கேள்விகளுக்கும் நான் உண்மையாக பதில் சொன்னபோது ஒரே நிமிடத்தில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், என்ன தவறு நடந்தது என்பதை புரிந்து கொண்டு அடுத்த முறை அதை சரி செய்யலாம் என்று யோசித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அவரிடம் விசா அதிகாரி கேட்ட மூன்று கேள்விகள்:
நீங்கள் ஏன் அமெரிக்கா செல்ல விரும்புகிறீர்கள்?
இந்தியாவுக்கு வெளியே நீங்கள் பயணம் செய்து உள்ளீர்களா?
உங்களுக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்களா?
இதில் மூன்றாம் கேள்விக்கு, “எனது காதலி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா பகுதியில் வசிக்கிறார். அவரை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்,” என்று சொன்ன அடுத்த வினாடியில், விசா அதிகாரி விசாவை நிராகரித்து, நிராகரிப்புக்கான ரசீதை வழங்கியதாகவும், தனது உலக சுற்றுலா கனவு கலைந்து விட்டதாகவும் அவர் பதில் அளித்துள்ளார்.
டிரம்ப் அதிபரான பின்னர் புதிய குடியுரிமை கொடுப்பதில் மிகவும் கெடுபடியாக இருப்பதாகவும், நீங்கள் நேர்மையாக காதலி அமெரிக்காவில் இருப்பதாக சொன்னதால், அமெரிக்கா சென்று அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவீர்கள் என்ற பயத்தில் தான் உங்கள் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும், பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்க விரும்புகிறீர்கள் போல் உங்களது பதில் விசா அதிகாரிக்கு தெரிந்து உள்ளது என்றும், ஆனால் இதெல்லாம் அதிக நாட்கள் இருக்காது, விரைவில் சரியாகிவிடும் என்றும் பலர் அந்த நபருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.