இதற்கு ஒரு முடிவே இல்லையா? சீனாவுக்கு 104% வரி விதித்த டிரம்ப்.. பங்குச்சந்தையை ஒழிச்சிருவாங்க போல..!

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், சீனாவுக்கு எதிராக 104% கூடுதல் வரி விதிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இது நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகையை…

america china

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், சீனாவுக்கு எதிராக 104% கூடுதல் வரி விதிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இது நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகையை மேற்கோளாகக் கொண்டு பல செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம்  சீனாவுக்கு 34%  வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் ஏற்பட்ட நிலையில் தற்போது 104% வரியால் மேலும் வர்த்தக போர் தீவிரமாகும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனா அமெரிக்காவுக்கு 34% வரி விதித்த நிலையில் இந்த வரியை நீக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சீனா தனது பதிலடி வரியை  நீக்கவில்லை என்பதால், வெள்ளை மாளிகை 104% கூடுதல் வரியை அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிரம்ப், சீனாவை எச்சரித்தும் அவர்கள் பதிலடி வரியை நீக்கவில்லை. இந்தக் காரணத்தால், தற்போதைய மிகப்பெரிய வரி உயர்வை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில் “சீனா தவறு செய்துள்ளது.  பதற்றத்தில் பதிலடி வரி போடும் முடிவை எடுத்துள்ளனர், இது அவர்கள் செய்யக்கூடாத ஒன்று. சீனா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரத்தில் பதற்றத்தில் செயல்பட்டது ரொம்ப தவறு,” என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கடந்த பிப்ரவரியில் சீனாவுக்கு 20% வரி விதித்தார். பின்னர் அதில் மேலும் 34% வரியை சேர்த்தார். இப்போது, நேற்று நள்ளிரவில் இருந்து மேலும் 50% வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக சீனாவுக்கு விதிக்கப்படும் வரி 104% ஆக உயர்கிறது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட், செய்தியாளர் சந்திப்பில், “சீனா பதிலடி செய்தது ஒரு பெரிய தவறு. அமெரிக்காவை யாராவது தாக்கினால், ஜனாதிபதி டிரம்ப் அதைவிட வலுவாக பதிலளிப்பார். அதனால் தான் 104% வரி இன்று இரவில் அமலில் வருகிறது. சீனா ஒரு உடன்பாடு செய்ய முன்வந்தால், ஜனாதிபதி அதை நெகிழ்ச்சியுடன் ஏற்கலாம்,” என்று தெரிவித்தார்.