அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்ததாலும், அதற்கு பதிலடியாக இந்தியா தனது ஏற்றுமதி சந்தையை பல்வகைப்படுத்தியதால் டிரம்பின் வரிவிதிப்பின் தாக்கமே இந்தியாவில் இல்லை என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாகும். டிரம்ப் வரி விதித்ததும் பங்குச்சந்தை 5000 முதல் 10000 புள்ளிகள் சென்செக்ஸ் இறங்கும் என்று பயமுறுத்தப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நிகழவில்லை என்பதே இதற்கு முக்கிய உதாரணம் ஆகும்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்குக் காரணம்
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாகக் கூறி, ஜவுளி, ஆபரணங்கள் மற்றும் கடல் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரியை விதித்தது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்க ஏற்றுமதி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் இந்தியா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக பல்வேறு நாடுகளுக்கு தனது ஏற்றுமதியை விரிவுபடுத்தியது. அமெரிக்கா மட்டுமே இந்தியாவின் ஏற்றுமதி சந்தை இல்லை, உலகம் பரந்துவிரிந்து கிடக்கிறது என்பதை இந்தியா உணர்ந்தது. இதனால் அமெரிக்காவின் தடை இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இந்தியாவின் புதிய வர்த்தக உத்தி
இந்திய அரசு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள 50 நாடுகளுக்கு தனது ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்த ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஒரு நாடு ஏற்றுமதியை தடுத்தாலும், மற்ற 49 நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்தியா இந்த நாடுகளுடன் சிறப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்து, கூடுதல் வரிகளை குறைப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ திட்டமிட்டுள்ளது. தற்போது, இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 90% இந்த 50 நாடுகளுக்கு செல்கிறது, மேலும் விற்பனையாளர்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்க “ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்களுடன்” அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கு ஏற்பட்ட தாக்கம்
அமெரிக்காவின் 50% வரி, இந்தியாவுக்கு சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். குறிப்பாக அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் ரூ.83,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஆபரணங்களை ஏற்றுமதி செய்யும் ரத்தினங்கள் மற்றும் ஆபரண துறைக்கு கூடுதல் வரிவிதிப்பு என்பது மிகப்பெரிய சவாலாகும்.
இதற்குத் தீர்வு காண, இந்திய அரசு பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு சிறப்பு உதவிகள் மற்றும் நிதி உதவியை வழங்குவதுடன், அவர்களுக்கு புதிய சந்தைகளை கண்டறியவும், சர்வதேச வாடிக்கையாளர்கள் இல்லாத நிலையில் உள்நாட்டில் பொருட்களை விற்க உதவவும் திட்டமிட்டுள்ளது. இந்தியா ஒருசில மாதங்களில் புதிய சந்தையை கண்டுபிடித்து ரத்தினங்கள் மற்றும் ஆபரண துறைக்கு வழிகாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அமெரிக்கா என்ற ஒரு நாடு மட்டும் உலக நாடுகள் அல்ல, அமெரிக்காவுக்கு முழுவதுமாக ஏற்றுமதியை நிறுத்தினாலும், இந்தியாவால் சமாளிக்க முடியும் என்பதே உண்மை நிலைமையாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
